Ads Area

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை தரம் "B " நிலையிலிருந்து தரம் "A "நிலைக்கு உயர்த்த வேண்டும்.

( நூருல் ஹுதா உமர் )

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் "பீ " நிலையிலிருந்து தரம் "ஏ "நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற தேவையை உணர்ந்து சுகாதார அமைச்சும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும், கிழக்கு மாகாண சபையும் இணைந்து அதற்கான பணிகளை மக்களின் விருப்பத்தின் பேரில் துரித கதியில் முடித்து தரமுயர்வு கடிதத்தை நேரடியாக உங்கள் காலடிக்கு வந்து விரைவில் வழங்க தயாராக இருக்கிறேன் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியில் பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீ . எல் . சி நிறுவனத்தின் அல் - ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு கல்முனை கிளை ஊடாக அந்நிறுவனத்தின் சமூக கூட்ட பொறுப்புடமை ( Corporate Social Responsibility - CSR Project ) நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தகர்கள் பாராட்டு நிகழ்வும் இன்று (19) மாலை அபிவிருத்தி குழு பிரதி தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் அவர்களின் தலைமையில்  வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,

நோய்களிலிருந்து பாதுகாத்து ஒருவரை வீட்டுக்கு அனுப்பும் போது நோயாளிகள் வைத்தியர்களை கடவுளாகவே பார்ப்பார்கள். சுகாதார துறையில் பணிபுரிபவர்கள் ஒரு வரம் பெற்றவர்களாகவே நான் பார்க்கிறேன். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்நாளில் அவர்களின் தியாகம் அளப்பரியது. நன்மை- தீமைகளில் கலந்துகொள்ள முடியாத துர்பாக்கியசாலிகளும் அவர்களே. இருந்தாலும் அவர்கள் வரம் பெற்றவர்களாகவே தம்மை அவர்கள் நினைத்து கொள்கிறார்கள்.

நோய்கள் இல்லாமலாகி வைத்தியசாலைகள் குறைய வேண்டும் என்பதே எமது எண்ணம். அதே போன்று அநாதை இல்லங்களும், சிறைச்சாலைகளும் குறைய வேண்டும் என்பதே எமது ஆசையாக இருக்கிறது. வைத்தியசாலைகளில் சேவையின் தரம் உயர்ந்து செல்ல வேண்டும். குறைபாடுகளை கடந்து மனித அர்பணிப்பே உயர்ந்த சேவையை வழங்க மூல காரணம். எதிர்வரும் 2021 ஆண்டளவில் நடைபெற உள்ள அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்கின்ற விசேட திட்டத்தினுள்ளும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை உள்வாங்கியுள்ளோம். ஆளணி தேவைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நவீனமயப்படுத்தப்பட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்ககளை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். மிக பழமை வாய்ந்த வைத்தியசாலையான இவ்வைத்தியசாலை கடந்த காலத்தில் பல சவால்களை சந்தித்திருந்தாலும் இனி அவ்வாறான நிலையை நீங்கள் சந்திக்க கூடாது என்பதே எமது எண்ணம். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எதிர்வரும் காலங்களில் செய்ய ஆயத்தமாக உள்ளேன். 37 லட்சத்துக்கும் மேலாக பணத்தை செலவழித்து இப்பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்திருக்கும் ஆளுமைகள் நிறைந்த இந்த அபிவிருத்தி குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe