கிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள நெய்னாகாடு கிராமம் காணப்படுகின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தொழிலாகவும் இத்தொழிலே காணப்படுகின்றது.
இதேநேரம் மறுபுறத்தில் இப்பிரதேச சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை இத்தொழிலால் சுவாச நோய்க்கு உள்ளாகி வருகின்றனர். அரிசி ஆலைகளிலிருந்து கழிவாகப் பெறப்படும் உமியை செங்கற்களின் சூளையில் எரிபொருளாக இத்தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர். உமி எரிந்து முடிந்து சாம்பலானதும் காற்றில் பறந்து துகள்களாக வெளியேறுகின்றது. இத்துகள்களை சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை சுவாசிப்பதன் மூலம் சுவாச நோய்க்கு உள்ளாகின்றனர்.
சம்மாந்துறைக்கு தெற்காகச் செல்லும் மல்கம்பிட்டி பாதை வழியாகச் சென்றால் சுமார் 12கிலோமீற்றர் தூரத்தில் நெய்னாகாடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்று நெல்வயல்கள் காணப்படுகின்றன. பிரதான பாதையிலிருந்து கரடு முரடான, குண்டும் குழியுமான பாதை வழியே சென்றால் நெய்னாகாடு உள்ளது. இங்குள்ள பாதைகள் மிகவும் பைழமை வாய்ந்த, போக்குவரத்துக்கு பொருத்தமற்ற மண் பாதைகளாகவே காணப்படுகின்றன. இப்பாதைகள் இக்கிராமம் உருவான காலம் தொடக்கம் புனரமைப்புச் செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இக்கிராமத்தில் கடந்த 30வருடங்களாக வசித்து வரும் ஹமீது என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், "நான் இக்கிராமத்தில் திருமணம் செய்து 30வருடங்களாக வசித்து வருகின்றேன். இப்பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்தியும் நடைபெறுவதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வாக்குக் கேட்க அரசியல்வாதிகள் வருவார்கள், தேர்தல் முடிந்தால் சென்று விடுவார்கள். இங்குள்ள வீதிகளின் ஒவ்வொரு வளவிலும் கற்சூளைகள் காணப்படுகின்றன. இதனால் வெளியாகும் சாம்பலைத்தான் நாங்கள் நாளாந்தம் சுவாசிக்கின்றோம். இங்குள்ள பாதை வழியே வாகனம் சென்றால் புழுதி வானத்தை எட்டும் அளவிற்கு கிளம்பும். சில நிமிடங்களுக்கு பாதையே தெரியாமல் இருக்கும்.
இப்பிரதேசத்தில் வசிக்கும் நஜீபா என்ற பெண் கருத்துத் தெரிவிக்கையில், "இரவு வேளைகளில் தெருவிளக்குகள் இன்றி இப்பிரதேசம் இருளடைந்து காணப்படுகின்றது. இக்கிராமத்தைச் சுற்றி வயல்வெளிகள் காணப்படுவதால் யானைகளின் தொல்லைகள் அதிகம் காணப்படுகின்றது. எங்களது வீட்டின் கதவைத் திறந்தால் வாசலில் யானை நிற்கும். இங்கு யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தெருவிளக்குகள் இல்லை. இருளடைந்த பாதை வழியே இரவில் போக்குவரத்துச் செய்ய முடியாது. இரவில் மக்களுக்கு நோய் ஏற்பட்டால் சம்மாந்துறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதேநேரம் பாதையை யானைகள் மறித்து நிற்கும். வயல்களில் வேளாண்மை செய்யப்படும் போது மட்டும் யானைகளின் அட்டகாசம் சற்று குறைவாகக் காணப்படும்.
இப்பிரதேசத்தில் வசிக்கும் எஸ்.சித்ரா என்ற பெண் கருத்துத் தெரிவிக்கையில், "நான் எனது கணவரான ரமேஷுடன் தொழில் தேடி, மூதூரிலிருந்து இங்கு வந்து 12வருடங்களாக வாழ்கின்றோம். இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக தொழிலில் ஈடுபடுகின்றனர். மிகவும் கஷ்டப்பட்டே செங்கல் தொழிலைச் செய்கின்றோம். 3000செங்கற்களை வெட்டிக் கொடுத்தால் 5000ருபா கொடுக்கின்றார்கள். தொழிலுக்கு கஷ்டம் இல்லை என்றாலும் இங்கு சுகாதார வசதிகள் இல்லை. தூசும், வெப்பமும், துகள்களும் நிறைந்த சுற்றாடலே காணப்படுகின்றது. இங்கு மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளிலேயே வசிக்கின்றனர். இக்குடிசைகள் அடிக்கடி யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இரவு வேளைகளில் வெளியே செல்ல முடியாது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இன்றி பாதை இருளடைந்து காணப்படுவதால் எங்கெங்கு யானைகள் நிற்கின்றது எனத் தெரியாது. இக்கிராமத்தைச் சுற்றி வயல்வெளிகள் காணப்படுவதால் யானைகளின் ஊடுருவல் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் இரவு ஏழு மணியானால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.
இக்கிராமத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வசிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இவர்கள் இக்கிராமத்தின் ஆரம்பகாலக் குடியேறிகளாக காணப்படுகின்றனர். பலர் தொழிலுக்காக புதிதாக குறியேறியவர்களாக காணப்படுகின்றனர். பெரும்பாலானவர்கள் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் இருந்து குடியேறியவர்களாக உள்ளனர்.
இங்குள்ள நிலம் துகள்கள் படிந்த கருமை நிலங்களாக காணப்படுகின்றது. செங்கல் சூளைகளின் துகள் பரவியதால் மண் இவ்வாறு காணப்படுவதாக பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார். இப்பிரதேசம் ஒரு மேட்டு நிலமாக காணப்படுவதால் சிறு பயிரினங்கள் மற்றும் உப உணவுப் பயிர்களை செய்கை பண்ண முடியாத நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடப்பரப்புக் கூடியதாக காணப்பட்ட இக்கிராமம் கழிமண் அகழ்வு நடவடிக்கையால் பரப்பளவில் குறைந்து கொண்டு வருகின்றது. வெளிப் பிரதேசங்களில் உள்ளவர்கள் இக்கிராமத்தில் உள்ளவர்களுடைய காணிகளை விலைக்கு வாங்கி, மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு, இம்மண்களை அதிக விலைக்கு விற்பதோடு இக்காணிகளை தாழ்நிலமாக மாற்றுகின்றனர். குறைந்த விலைக்கு வாங்கப்படும் காணிகள் மண் அகழ்வின் பின்னர் நெற்பயிர்ச் செய்கை நிலமாக மாற்றப்பட்டு அதிக பெறுமதியுள்ள நிலமாக விற்பனை செய்யப்படுகின்றது. காலக்கிரமத்தில் இக்கிராமம் ஒரு தாழ்நிலமாக மாறக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. சுமார் 5இலட்சம் கொடுத்து வாங்கப்படும் ஒரு ஏக்கர் நிலம் மண் அகழ்வின் பின் தாழ்நிலமாக்கப்பட்டு 50இலட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி, குறைந்த விலைக்கு தங்களது நிலங்களை விற்றுவிட்டு வெளியேறிய பின்னர், அந்நிலம் மண் அகழ்வு செய்யப்படுகின்றது.
நன்றி - (எம். முஸ்தபா- தினகரன்)