Ads Area

ரஜினிகாந் வட்டிக்குவிடும் தொழில் செய்வதாக வருமான வரித்துறையினர் சந்தேகம்.

நடிகர் ரஜினிகாந்த் 2002 -ம் ஆண்டு முதல் 2005-ம் நிதியாண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில் குறைபாடு இருப்பதாக வருமானவரித்துறை குற்றம் சுமத்தியிருந்தது. இதற்காக 2002-03-ம் ஆண்டுக்கு 6,20,235 ரூபாயும், 2003-04ம் ஆண்டுக்கு 5,56,326 ரூபாயும், 2004-05ம் ஆண்டுக்கு 54,45,875 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்தார், ரஜினி. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரஜினியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர், ரஜினி மீதான வழக்கை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, ரஜினி மீதிருந்த வருமான வரித்துறை வழக்கை இரு நாள்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தீர்ப்பாயம்.

இந்நிலையில், 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை ரஜினி, தன்னுடைய பணத்தில் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பாயத்தில் வரி குறைபாடு தொடர்பாக ரஜினி தரப்பு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் விளக்கத்தில், ‘ 2002-03ம் நிதியாண்டில் 2,63,00,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அதில் 1,45,000 ரூபாய் வட்டி வந்தது. இதன் வரி முறையாகச் செலுத்தப்பட்டுவிட்டது. 2004-05ம் நிதியாண்டில் வட்டிக்கு வழங்கிய 1,71,00,000 ரூபாய் வசூலாகவில்லை. இதனால் தனக்கு 33,93,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வாராக்கடனைக் கணக்குக் காட்டுவதற்காக ரஜினி வட்டிக்குப் பணம் கொடுத்துச் சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுதொடர்பான கேள்விக்கு ரஜினி விளக்கமளித்ததாகக் கூறப்படும் தகவலில், `பொருளை அடமானம் வைத்து பணம் தருவதையே நான் வட்டித் தொழில் என நினைத்திருந்தேன். நான் எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தைக் கடனாக வழங்கினேன். இது எப்படித் தொழிலாகும். நான் இதை வியாபாரமாகச் செய்யவில்லை. வட்டிக்குப் பணம் தருவது என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். நான் அப்படி எந்தத் தொழிலும் செய்யவில்லை’ என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்ட வருமானவரித்துறை, ரஜினி மீதான வழக்கை வாபஸ் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe