(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிரதான சுதந்திர தின நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (04) கல்முனை நகர மத்தி சுற்றுவட்ட சந்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்விழா தொடர்பாக மாநகர சபை உறுப்பினர்களுடனும் வர்த்தகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சனி, ஞாயிறு தினங்களில் இரு கட்டங்களாக விசேட கலந்துரையாடல்கள் நடைபெற்றன. கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இதனை முன்னிட்டு குறித்த சுதந்திர சதுக்க மேடை புனரமைப்பு செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கல்முனை மாநகர சபை வளாகம் தேசிய கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.
மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெறவுள்ள இச்சுதந்திர தின விழாவில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருப்பதுடன் கல்முனையிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பொலிஸ், முப்படை உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களும் பொது மக்களும் பங்கேற்கவுள்ளனர்.