(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் அரச மற்றும் தனியார் பஸ் நடத்துனர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் தலையீட்டினால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை பஸ் நிலையத்தில் இன்று தனியார் பஸ்கள் தரித்து நிற்பதற்கு இடமளிக்க மறுத்து, இ.போ.ச.பஸ் நடத்துனர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து இரு தரப்பினரிடையேயும் உருவான முரண்பாடு காரணமாக அங்கு அவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த சர்ச்சை குறித்து கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த முதல்வர், பஸ் நிலையத்தில் அதிரடியாக களமிறங்கி, தனியார் பஸ்களை தரித்து வைப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தி, ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.
"இந்த பஸ் நிலையம் கல்முனை மாநகர சபைக்கே சொந்தமானதாகும். இங்கு தனியார் பஸ்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கு இ.போ.ச. தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற இரு தரப்பு பஸ்களுக்கும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தும் உரிமை இருக்கிறது" என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பயணிகளின் நலன் கருதி கல்முனை பஸ் நிலையத்தை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளுக்கு இரு தரப்பினரும் மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் மாநகர முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு பஸ் நிலையத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதியில் இடமொதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ஒழுங்கு விதிகளுக்கேற்ப அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து, வழிநடாத்தும் பணியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையின்போது மாநகர முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.நிசார், எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.