(பாறுக் ஷிஹான்)
பல்கலைக்கழக வாய்ப்பு என்ற பெயரில் பல வரப்பிராசாதங்களை அரசாங்கம் இல்லாமல் செய்து வருவதாக சம்மாந்துறையில் இயங்கி வருகிற SLIATE என்ற நிறுவனத்தில் கற்கின்ற மாணவர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் சம்மாந்துறை சுற்றுவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (3) நண்பகல் 2 மணியளவில் ஒன்று கூடி பேரணியாக தத்தமது கோரிக்கைளை கோஷங்களாக எழுப்பியதுடன் ஊடகங்களுக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாணவர்கள்
இலங்கையில் அரச பல்கலைக்கழங்களுக்கு அடுத்ததாக உயர் தேசிய டிப்ளமோ பட்டதாரிகளை உருவாக்கும் 1995ம் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பே உயர் தொழில்நுட்ப கல்லூரி (SLIATE) ஆகும். தற்போது இலங்கையில் 19 உயர் தொழில்நுட்ப கல்லூரிகள் காணப்படுகின்றன. என்றாலும் தற்போது அனைவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற பெயரில் இந்நிறுவனத்திற்கு காணப்பட்ட பல வரப்பிராசாதங்களை அரசாங்கம் இல்லாமல் செய்யவுள்ளது.
அதன் முதற்கட்டமாக 2020/1/20ம் (2159/01) திகதி அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உயர்கல்வி அமைச்சின் கீழ் காணப்பட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரிகளை தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக பெப்ரவரி 5ம் திகதி கையளிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தினூடாக உயர் தேசிய கல்லூரிகளை, தொழில்நுட்ப கல்லூரிகளாக மாற்றப்படவுள்ளன.
அதாவது மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பவியல் சார் பாடநெறிகளுக்கு பட்டதாரிச் சான்றிதழும், தொழில்நுட்பவியல் சாராத பாடநெறிகளுக்கு தேசிய தொழிற்தகைமை 5 (NVQ 5) சான்றிதழும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஏற்கனவே காணப்பட்ட சட்ட மூலங்கள் படி கணக்கியல் (HNDA) பாடநெறிக்கு பட்டதாரிக்கு சமனான அந்தஸ்தும் ஏனைய பாடநெறிகளுக்கு உயர் தேசிய டிப்ளமோ (NVQ 6) தகைமை காணப்படுவதாக தெரிவித்ததுடன் போராட்டத்தை அமைதியாக நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.