அதிக இலாபமீட்டும் சிறந்த வர்த்தகமாக மாறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், இன்றைய அரசியல் நிலையும்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதி சிறந்த வர்த்தகமாக காணப்படுவது அரசியலாகும். அதிலும், உள்ளூராட்சிமன்ற, மாகாணசபை பதவிகள் அனைத்தையும் விட பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூலமாகவே அதிகமாக சம்பாதிக்க முடிவதுடன், புகழும் கிடைக்கின்றது.
இதற்காகவே பண முதலைகள் பல கோடி ரூபாய்களுடன் களத்துக்கு வருகின்றார்கள். இந்த பதவிகள் மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பதனால்தான் மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளை தேடுகின்றார்கள்.
பின்பு தனது ஊரை சேர்ந்த மக்களின் வாக்குகளை மொத்தமாக கொள்ளையடிப்பதற்காக அதி உயர்ந்தபட்ச பிரதேசவாதம் என்னும் தீய விதைகளை விதைத்து ஊருக்கு எம்பி வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுகின்றார்கள்.
இந்த போட்டி வர்த்தகத்தில் வெற்றிபெறுவதற்காக எவர் மக்களை கவரும்படியாக மேடைகளில் பேசுவதுடன், அதிகமாக பணம் செலவளிக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெறுகின்றார்கள்.
வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றபின்பு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் பல கோடி பெறுமதியான வாகன கோட்டா வழங்கப்படுகின்றது. அதனை விற்பனை செய்வதன்மூலம் தான் தேர்தல் காலங்களில் செலவழித்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
அதாவது இந்த வர்த்தகத்துக்காக செய்த முதலீடுகள் மொத்தமாக வாகன பேமிட் மூலம் ஓரிரு மாதங்களில் திரும்ப கிடைக்கப்பெறுகின்றது. அதன் பின்பு ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக கிடைப்பதெல்லாம் இலாபமாகும்.
இவைகள் ஒருபுறமிருக்க, அரசாங்கம் ஏதாவது சட்டங்களை இயற்றுவதென்றால் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக பல கோடிகள் பெட்டிகளில் பணமாக கைமாறப்படுவது ஒரு சாதாரண விடயமாகும்.
அத்துடன் அரசியல் குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தனது பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்காக பல கோடிகளை விலை பேசுவார்கள். மறுபக்கத்தில் தனது தரப்பிலிருந்து பிரிந்து செல்லாமல் இருக்கும் வகையில் பல கோடிகளை வழங்குவார்கள்.
மொத்தத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில் கட்சி மாறினாலும், மாறாவிட்டாலும் கோடிக்கணக்கில் பணம் வந்து சேர்வதில் எந்த தடையும் இல்லை. கோடிகள் மட்டுமல்லாது அவர்கள் மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக கான்பிக்கப்படுவதோடு வரலாற்றில் அவர்களது பெயர்களும் பதியப்படுகின்றன.
எனவே கோடிக்கணக்கில் பணமும், புகழும் கிடைக்கின்ற ஒரேயொரு சிறந்த வர்த்தகமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர வேறு எந்த வர்த்தகமும் இந்த உலகில் இல்லை.
மக்களின் பிரச்சினைகள் அடுத்த தேர்தல் பிரச்சாரத்துக்கான மூலப் பொருளாக பாவிக்கப்படும். இதுதான் இன்றைய அரசியல். இதனை எல்லோரும் புரியமாட்டார்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது