Ads Area

வன்முறையை தடுத்து நிறுத்துங்கள்; இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வேண்டுகோள்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.  இதில் 34 பேர் வரை பலியாகி உள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 43வது கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் கடந்த 24ந்தேதி தொடங்கியது.  வருகிற மார்ச் 20ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அதன் தலைவர் மிச்சேலே பாக்லெட் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து சமூகங்களை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும், பெருமளவில் அமைதியான முறையிலேயே இச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.  நாட்டில் பன்னெடுங்காலத்திற்கு இருந்து வந்த மதசார்பற்ற கலாசாரத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக பிற குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலின்பொழுது, போலீசார் செயல்படாதது பற்றிய அறிக்கைகள் மற்றும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது போலீசார் கூடுதல் படைகளை பயன்படுத்தியது என்று அதற்கு முன்பு கிடைத்த அறிக்கைகள் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன்.

கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து இதுவரை 34 பேர் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.  வன்முறையை தடுக்க வேண்டும் என இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பேசியுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe