கல்முனையில் 155 மில்லியன் ரூபா நிதியில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி..!
கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கல்வி, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் 155 மில்லியன் ரூபா நிதியில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (02) இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எமது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்தபோது மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் பயனாக கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் சில வருடங்களுக்கு முன்னர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜெயசேகர கல்முனைக்கு விஜயம் செய்து, இம்மைதான அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். அதன் முதல் கட்டமாக 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இங்கு நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம் இதற்கான டென்டர் அழைப்பு விடுக்கப்பட்டு, ஒப்பந்த மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவை குறித்த நிர்மாணத் திட்டத்தை பொறுப்பேற்றுள்ளன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடைபெறுகின்ற அரசியல் சூழ்நிலை இத்திட்டத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அமைச்சுப் பதவியைத் துறந்து, அரசியல் அதிகாரம் இல்லாத சூழ்நிலையிலும் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்தியில் மிகக்கரிசனையுடன் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு, இவ்விடயத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு கல்முனை மாநகர மக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.நிஸார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், ஏ.எம்.பைரூஸ், மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், மாநகர முதல்வரின் இணைப்பாளர் ஏ.சி.சமால்தீன், தேசமான்ய எம்.எம்.ஜௌபர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
Mayor's Media Division