கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் அறவிடப்படும் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ சேவை (குப்பை) வரியை 30 வீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாள் ஒன்றுக்கு அறவிடப்படும் 10 ரூபா குப்பை வரியை 07 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
"எமது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினதும் பொது அமைப்புகளினதும் வேண்டுகோளின் பேரில் பொது மக்களின் நலன்கருதி கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை வரியை 30 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அடுத்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும் கடந்த செப்டம்பர் மாதமே அது அமுலுக்கு வந்தது. ஆனால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக அது அறவிடப்படாமலும் இருந்தது. எவ்வாறாயினும் எதிர்காலங்களில் நாள் ஒன்றுக்கு 07 ரூபா வீதம் குப்பை வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்மக்கழிவகற்றல் சேவையை பொறுத்தளவில் வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் முகாம்கள் என்று அனைத்து அரச நிறுவனங்களினதும் குப்பைகளை அன்றாடம் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகவே பொறுப்பேற்று அகற்றி வருகின்றோம். இவை பொதுமக்கள் பயன் பெறுகின்ற நிறுவனங்களாகும். அந்த வகையில் தமது வீட்டுக் குப்பைகளுக்கு மேலதிகமாக தமக்கு சேவை வழங்குகின்ற இந்நிறுவங்களின் குப்பைகளும் மாநகர சபையினால் அகற்றப்படுவதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.நிஸார், எம்.எஸ்.எம்.சத்தார், ஏ.எம்.பைரூஸ், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், மாநகர சபையின் சட்டப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம்.இஸ்மாயில், மாநகர முதல்வரின் இணைப்பாளர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
@
Mayor's Media Division