Ads Area

கொரோனா போர்வையில் மட்டக்களப்பு கெம்பஸ் அபகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா போர்வையில் பெற்றி கெம்பஸ் அபகரிப்பு;

* கல்முனை மாநகர முதல்வர் றகீப் பலத்த கண்டனம்..!

* அரசின் சூழ்ச்சியை முறியடிக்க கிழக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறைகூவல்..!

கொரோனா பரிசோதனை என்ற போர்வையில் பெற்றி கெம்பஸை முறையற்ற விதத்தில் அரசு கையகப்படுத்தியிருப்பதை வன்மையாக கண்டித்துள்ள கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க இன, மத பேதங்களுக்கப்பால் கிழக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"அனைத்து இன மாணவர்களினதும் உயர்கல்வி வாய்ப்பை கருத்தில் கொண்டே வெளிநாட்டு நிதியுதவியுடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு பல்கலைக் கல்லூரியை நிறுவியிருக்கிறார். அங்கு பல கற்கை நெறி பீடங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி பொருத்தமானவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி, வசதி குறைந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும் உயர் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான தூரநோக்கு சிந்தனையுடன் அவர் இதனை ஸ்தாபித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையடுத்து, இனவாதிகள் பெற்றி கெம்பஸை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி, பாரியளவில் எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததை முழு நாடும் அறியும். இப்பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் அல்லது அரசு சுவீகரிக்க வேண்டும் என்று இனவாதிகள் இன்றும் வலுயுறுத்தி வருகின்றனர்.

நாடு தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அத்தகைய இனவாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலும் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கிலுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கருதுகின்றோம். நாட்டில் எத்தனையோ இடங்கள் இருக்கத்தக்கதாக இந்த கெம்பஸை ஆக்கிரமித்து, கொரோனா பரிசோதனை நிலையமாக செயற்படுத்துவதன் மர்மம் புரியாமல் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட மாந்தீவு எனுமிடத்தில் பல விடுதிகளுடன் சுமார் 500 கட்டில்களுடன் கூடிய போதிய வசதிகளும் கொண்ட தொழுநோய் வைத்தியசாலை ஒன்று நோயாளர் எவருமின்றி பொருத்தமாக இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தாமல் ஓர் உயர் கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருப்பது ஏன் என்று புரியாமல் இல்லை.

ஒரு தனியார் நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதென்றால் சில ஒழுங்கு, விதிமுறைகள் இருக்கின்றன. அவை எதுவும் பின்பற்றப்படாமல், கொரோனா பரிசோதனை நிலையமாக பயன்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடு என்ற போர்வையில் பெற்றி கெம்பஸ் அபகரிக்கப்பட்டிருப்பதானது, சட்ட ஆட்சித் தத்துவத்தை முற்றிலும் மீறுகின்ற செயலாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பெற்றி கெம்பஸின் நிறுவுநரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஓர் அரசியல்வாதியாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பொதுஜன பெரமுனவின் கூட்டுக்கட்சியாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்கு சாதகமான நிலைப்பாட்டையே மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு தமது அணியில் இருக்கின்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் சார்பான அரசாங்கத்தினால் இந்த அநியாயம் இழைக்கப்படுகிறது என்றால், ஏனைய முஸ்லிம் தலைமைகளினதும் மக்களினதும் நிலைமை எவ்வாறு அமையும் என்பது குறித்து அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது.

வெளிநாடுகளில் இருந்து கட்டுநாயக்கவை வந்தடைகின்ற மக்களை மட்டக்களப்பு வரை இவ்வளவு தொலைதூரம் அழைத்து வந்து தங்க வைப்பதற்கான எந்த நியாயமான காரணமும் இல்லை. கொரோனா வைரஸினால் முழு உலகமும் பீதியடைந்து, வெருண்டோடுகின்ற சூழ்நிலையில் கிழக்கிழங்கையை இதற்காக தேர்ந்தெடுத்திருப்பதானது இப்பகுதி மக்கள் குறித்து அரசாங்கம் கவலை கொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இச்செயற்பாடு கிழக்கு மக்களை ஒட்டுமொத்தமாக பதற்றமடைய செய்திருப்பதை அரசாங்கம் ஏன் கண்டுகொள்ளவில்லை.

ஆகையினால், பெற்றி கெம்பஸ் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக மீளப்பெற்று, எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தின் உயர்கல்விக்கு பங்களிப்பு செய்யக்கூடிய நிறுவனமாக பெற்றி கெம்பஸ் மிளிர்வதற்கான பயணத்தை இடையூறின்றி தொடர்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

அதேவேளை தமது இளம் தலைமுறையினருக்கான உயர் கல்வி நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கொரோனா வைரஸில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கும் கிழக்கு மாகாண மூவின மக்களும் இன, மத பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். இது விடயத்தில் எத்தகைய சவால்கள் வந்தாலும், பெற்றி கெம்பஸை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் பின்னிற்கக் கூடாது" என்றும் கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe