Ads Area

கிறிஸ்தவரின் வீட்டில் வைக்கப்பட்ட மரணித்த முஸ்லிம் ஒருவரின் உடல் ; மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கில் சம்பவம்.

தகவல் - எம்.எஸ்.எம். நுார்டீன்.

கடந்த முதலாம் திகதியன்று மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு கிராமத்திலுள்ள கிறிஸ்தவ சகோதரர்களின் வீட்டில் முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாசா (மரணித்த உடல்) வைக்கப்பட்டு அங்கிருந்து ஜனாசா  அடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முகம்மது அறூஸ் (வயது 59) கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் பல வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லியன்காடு பிரதேசத்துக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு 3 பிள்ளைகளுமுள்ளனர்.

அங்கு வாழ்ந்து வந்த இக்குடும்பம் 1990ம் ஆண்டு ஏற்பட்ட அசாதரண சூழ் நிலையில் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு கிராமத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்த நாவற்குடா கிழக்கு கிராமத்திலுள்ள ரட்ணம் எனும் கிறிஸ்தவரின் குடும்பத்துடன் நட்புடன் பழகி வந்தனர். மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்ததையடுத்து அறூஸும் அவரது மனைவியும் வாழ்வதற்கு இடமின்றி இருந்த போது இக் கிராமத்தில் இருக்கும் ரட்ணம் எனும் கிறிஸ்வத சகோதரர் அக் கிராமத்திலுள்ள காணியொன்றை வாங்கி அதில் இந்த முஸ்லிம் குடும்பத்தை குடியமர்த்தியிருந்தார்.

பல வருடங்களாக அறூசின் குடும்பம் இந்த ரட்ணம் என்பவரின் குடும்பத்துடைய பராமரிப்பிலேயே இருந்து வந்தது. இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை அறூசின் குடும்பம் செய்வதற்கு இந்த கிறிஸ்தவ குடும்பம் எந்த தடையும் விதிக்க வில்லை. இவர்களுடைய இன்பம் துன்பம் அத்தனையும் இந்த கிறிஸ்தவ குடும்பம் ஒரு சகோதரத்துவத்துடன் கவனித்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் அறூஸ் நோய் வாய்ப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தான் மரணித்தால் (மௌத்தானால்) தன்னை பராமரித்த ரட்ணம் என்ற இந்த கிறிஸ்தவ சகோதரரின் வீட்டில் தனது ஜனாசா வைத்து அங்கு குழிப்பாட்டி கபன் செய்து பள்ளிவாயலுக்கு எடுத்துச் சென்று தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்யுமாறு (வசிய்யத்) கூறியிருந்தார்.

கடந்த 01.03.2020 ஞாயிற்றுக்கிழமையன்று இவர் மரணித்து விட்டார் அதன் படி அவருடைய ஜனாசா ரட்ணம் எனும் கிறிஸ்தவ சகோதரரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு குழிப்பாட்டி கபன் செய்து அவரின் வீட்டில் குர்ஆன் ஓதி பூநொச்சிமுனை ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தொழுகை நடாத்தி பின்னர் பூநொச்சிமுனை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்துள்ளனர்.

இவருக்கு கப்று வெட்டி குழிப்பாட்டும் நடவடிக்கையில் புதிய காத்தான்குடி பதுறியா பிரதேசத்திலுள்ள ஜனாசா நலன்புரிச்சங்க சகோதரர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு கப்று (புதை குழி) வெட்டும் போது ரட்ணமின் மகன் பகிந்தனும் சேர்ந்து நானும் இவருக்காக கப்று வெட்ட வேண்டும் என தெரிவித்து அவரும் சேர்ந்து கப்று வெட்டியுள்ளார்.

இவரின் ஜனாசா நல்லடக்கம் செய்த பின்னர் அவருடை மனைவியின் இத்தாக்கடமைக்காக அவரது உறவினர்கள் அவருடைய ஊருக்கு அழைத்துச் சென்றதாகவும் இத்தாக்கடமை முடிந்த பின்னர் தனது வீட்டுக்கு வருமாறு ரட்ணம் அவரது மனைவி பிள்ளைகள் கூறியுள்ளனர்.

மேற்படி ரட்ணம் ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியராகும் இவர் காத்தான்குடி நகர சபையில் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளியாக கடமையாற்றி ஓய்வு பெற்றவராகும். தனக்கு அருகிலுள்ள முஸ்லிம் குடும்பங்களோடு மிகவும் நெருக்கமாக சகோதரத்துவத்துடன் தானும் தனது குடும்பமும் பழிகி வருவதாகவும் குறிப்பிடுகின்றார்.

மதம் கொள்கைகளுக்கப்பால் இவ்வாறான சகோதரத்துவமும் மனிதாபிமானமும் நிறைவே இருக்கின்றன.

சமூகங்களுக்கிடையிலான ஐக்கியம் புரிந்துனர்வு சகோதரத்துவம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அதற்கு இது நல்லதொரு சான்றாகும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
05.03.2020

குறிப்பு: இந்த புகைப்படத்தில் காணப்படுபவர்கள் ரட்ணம் அவரது மனைவி பிள்ளைகள் மருமகன் இவர்களுடன் நானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe