Ads Area

அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் ஆன்மீக வழிபாடுகள்.

பாறுக் ஷிஹான்

இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் செவ்வாய்க்கிழமை (21 )  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.  ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இதன்படி அம்பாறையிலுள்ள பள்ளிவாசல்கள்  தேவாலயங்கள் கோவில்களில்  இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன. அத்துடன், கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன் படி குறித்த  குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான நினைவு துஆ பிராத்தனை நிகழ்வு  காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ. ஆதாம்பாவா (ரஸாதி) அவர்கள் பிரதம உரையையும், துஆ பிராத்தனையையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்  செயலாளர்,பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து கல்முனை சிறிய முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவசிறி சாமித்தம்பி இராஜேந்திரன் குருக்கள் தலைமையில்   விஷேச பூசை வழிபாடுகள் இடம்பெற்றது இதன்போது ஆலய நிருவாகத்தின்யும்  கலந்து கொண்டு நினைவு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தினர்.

கல்முனை இருதய நாதர் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள மாதா திருச்சொரூபத்திற்கு அருகில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு வணக்கத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கல்முனை மணற்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் அருட் சகோதரர் ஏ. ஜேசுதாஸன்  தலைமையில் நினைவு வணக்கமும் பிராத்தனையும் இடம்பெற்றதுடன் கல்முனை பரலோக வாசல் தேவ சபையில் மத போதகர் ஏ.கிருபைராஜா தலைமையில் நினைவு வணக்க பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இறுதியாக கல்முனை சுபத்ராராமய விகாரையில் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் சிறப்பு வழிபாடும் இடம்பெற்றது.

இதே வேளை அஷ்சேக் அப்துல் காதார் மிஸ்பயி தலைமையில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை ஒன்றும் மதியம் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் நம்பிக்கையாளர் உப செயலாளர் அஷ்செய்க் இஸ்காக் நளிமீ முச்சபை தலைவர் செயலாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மிகவும் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியே வழிபாடுகள் இடம்பெற்றன. ஒரு சிலரே பங்கேற்றிருந்தனர். அதேபோல் பெரும்பாலான மக்கள் வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர்   பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. இத்  தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்   காலை 9 மணிக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலத்தின் முன்னால் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த தேவாலய கட்டிட நிர்மானப்பணிகளை அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக செய்து வந்தது இருந்தபோதும் கடந்த டிசம்பர் மாதம் குறித்த கட்டிட நிர்மானப் பணிகளை இராணுவம் இடைநிறுத்தி அங்கிருந்து வெளியேறினர்

இதனால் குறித்த தேவாலய கட்டிடப்பணிகள் பூர்தி செய்யப்படாமல் மூடப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் நினைவு தின அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூடக்கூடாது எனவும் வீடுகளில் அஞ்சலியை செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் குறித் தேவாலயத்தில் மக்கள் ஓன்று கூடமுடியாதவாறு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன் தேவாலய முன்பகுதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சீயோன் தேவாலய முன்றிலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களினை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தேவாயலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையாத நிலையில் பிரதான வாயில் மூடப்பட்டு அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe