ஊரடங்கு சட்டத்தை நீக்கி, பாடசாலைகள் வேலைத்தளங்கள் என்பவற்றை ஆரம்பித்து நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் மூலம் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
அத்தோடு தேர்தல் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதிலும் ஏன் அரசாங்கம் காட்டவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டுக்கு சுமார் 7 பில்லியன் டொலர் வருமானம் இவர்களால் கிடைக்கப் பெறுகின்றது.
அவர்களது தங்களது குடும்பங்களுக்கு பணத்தை அனுப்பினாலும் நாட்டு பொருளாதாரத்தில் அந்த பணம் பெரும்பங்கு வகிக்கின்றது. இலங்கை பிரஜைகளுக்கு வெளிநாடுகளில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்களுக்கு தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான உரிமை இருக்கிறது. அது அவர்களது அடிப்படை உரிமையாகும். அவ்வாறானவர்கள் நாட்டு அழைத்து வரப்பட்டால் அவர்களை வைரஸ் பரப்புபவர்களாக எண்ணுவது தவறாகும்.
கொரோனா பரவல் நிலைமையில் சுகாதாரத்துறையினர் , பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் வைரஸ் ஒழிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் அரசாங்கம் பாடசாலைகளைத் திறப்பதையும் அதிவேக நெடுஞ்சாலைகளைத் திறப்பதையும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதிலும் அவதானம் செலுத்தி வருகிறது.
இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளதாகக் காண்பித்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வே அரசாங்கம் முயற்சிக்கிறது. தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் காண்பிக்கும் முயற்சியை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலோ அல்லது வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கின்ற இலங்கையர்களை நாட்டு அழைத்து வருவதிலோ காட்டவில்லை.
அரசாங்கம் கூறுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தேர்தலை நடத்த முடியும் என்றால் ஏன் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வர முடியாது ? இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளியுறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு நாம் கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம். இதற்கான பல யோசனைகளும் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளன.
சவுதி, குவைத், கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் அந்நாட்டு பிரஜைகளுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்துள்ள போதிலும் அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை.
இதே போன்று மாலைத்தீவில் வசிக்கும் இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பணம் இருந்த போதிலும் உணவு பொருட்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.
குறிப்பாக நேரடியாக தூதரகங்கள் அற்ற நாடுகளிலும் இலங்கையர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இவ்வாறு வெவ்வேறு நாடுகளிலும் இருப்பவர்களின் பிரதான கோரிக்கை அவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதேயாகும்.
அண்மையில் குவைத் அரசாங்கம் பொது நிவாரண காலமொன்றை அறிவித்தது. இதன் மூலம் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் கூட தம்மைப் பதிவு செய்து நாட்டுக்குச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்ய சென்ற போது அங்கு கடவுச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டனர். ஏனையவர்கள் நிர்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கை அரசாங்கம் பயணிகள் கப்பல் அல்லது விமானம் அல்லது இவ்விரண்டு சேவைகளையும் ஒன்றாகவேனும் ஏற்பாடு செய்து இலங்கை பிரஜைகளை மீட்க வேண்டும்.
இதே போன்று சவுதியிலும் அந்நாட்டு சட்ட திட்டங்கள் காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் சிலரிடம் இனி அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.