Ads Area

முஸ்லிம்களை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்துவது ஈனச்செயல்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பான பரிந்துரை அறிக்கையில் முஸ்லிம் சமூகத்தினரை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்தபட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க, ஈனச்செயலாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

"கொரோனா வைரஸ் பரவலுடன் முஸ்லிம் சமூகத்தை தொடர்புபடுத்தி, புலமைசார் அமைப்பினர் இவ்வாறு இனத்துவ ரீதியில் அறிக்கை வெளியிட்டிருப்பதை முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் யதார்த்தத்தை புரிந்து கொள்கின்ற பிற மதங்களை சேர்ந்த புத்திஜீவிகள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையிலேயே இந்த அறிக்கையுடன் சம்மந்தப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி சஞ்ஜீவ வீரரத்ன, குறித்த அறிக்கையை நிராகரித்து, கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் இதனால் கவலையடைந்துள்ள முஸ்லிம் சமூகத்தினருக்காக மனம் வருந்துவதாகவும் குறிப்பிட்டு மறுப்பறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

கலாநிதி சஞ்ஜீவ வீரரத்ன அவர்களின் மறுப்பறிக்கையை வைத்துப் பார்க்கின்றபோது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்தினருக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வாதப்பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்று முஸ்லிம்களுக்கு மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறதா எனும் கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. அவ்வாறே சீனாவில் கொரோனாவை உருவாக்கி, பரப்பியதும் முஸ்லிம்கள்தானா? அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெய்ன் என்று எல்லா நாடுகளுக்கும் கொரோனாவை காவிச்சென்றதும் முஸ்லிம்கள்தானா? என்றும் கேட்க விரும்புகின்றோம்.

சீனாவில் கொரோனா தீவிரமடைந்தபோது, இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே, அரசியல் தலைமைகள் சிலர், விமான நிலையத்தைப் பூட்டி, நாட்டை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அக்கோரிக்கையில் இருந்த பாரதூரத்தன்மை புறந்தள்ளப்பட்டு, பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித்தினம் வரை கொரோனா தடுப்புக்கான நடவடிக்கைகள் காலதாமதப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இத்தாலியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதுவே எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கான அடிப்படைக் காரணம் என்பதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறியாத விடயமல்ல. அவ்வேளையில் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஏன் இந்த வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை.

அவ்வாறே, அரசாங்கம் தனது அரசியல் இலாபத்திற்காக செய்த தவறுக்காக, தன் மீதான கறையை போக்குவதற்கு, ஒரு சமூகத்தின் மீது பழியைப்போடுவதென்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். இது இந்தியாவின் பி.ஜே.பி. அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்பாடுகளை ஒத்ததாக காணப்படுகிறது. தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளை ஈர்ப்பதற்காக இன்னொரு சமூகத்தினரை மலினப்படுத்துவதானது மானிட தர்மத்திற்கு முற்றிலும் முரண்பாடான செயற்பாடாகும்.

ஆகையினால் அன்பார்ந்த முஸ்லிம்களே,

எமது பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றோம். எம்மைக் குறி வைத்து இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருவதனால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்வதில் அதிக கரிசனை செலுத்த வேண்டும். இதன் மூலமே இனவாத சக்திகளினால் பரப்பப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று எம்மால் நிரூபிக்க முடியும்.

தப்பித்தவறி நம்மில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின் இனவாத சக்திகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையென்று நிரூபிக்கப்படுவதுடன் எமது சமூகம் பாரிய நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆகையினால் இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.



இதன் காரணமாகவே எமது பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுப்பதற்காக ஆரம்பம் தொட்டே முற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். இவற்றுக்கு இனிவரும் காலங்களிலும் நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலம் கொரோனா அற்ற மக்களாக நாம் தொடர்ந்தும் பயணிக்க முடியுமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் தவறிழைப்போமானால் நாம் இதுகால வரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அர்த்தமற்றவையாக மாறிவிடும் என்பதையும் உணர்ந்து செயற்படுங்கள்.

ஆகையினால் எதிர்வரும் காலங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்ற வேளைகளிலும் கூட, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுவதில் தொடர்ந்தும் உறுதியாக இருக்குமாறும் அதற்காக எத்தகைய தியாகத்தை செய்வதற்கு தயாராகுமாறும் மிக வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe