கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை (18) கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பகுதி, பொதுச் சந்தை, பெண்கள் சந்தை, பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச, தனியார் நிறுவனங்கள், பிரதான வீதி, கடற்கரை வீதி, மாளிகா வீதி, ஸாஹிராக் கல்லூரி வீதி உள்ளிட்ட முக்கிய பாதைகள், சிறுவர் பூங்கா, மைதானங்கள் உள்ளிட்ட மக்கள் கூடுதலாக நடமாடும் பொது இடங்கள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளும் கிருமி தொற்று நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப நாட்களில் பிரதான பஸ் நிலையம், ஐக்கிய சதுக்கம், பொதுச் சந்தை, அரச, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் பாதைகளும் கிருமி தொற்று நீக்கி, சுத்தம் செய்யப்பட்டிருந்தன.
கல்முனை மாநகரில் முன்னெடுக்கப்பட்ட கிருமி தொற்று நீக்கும் பணிகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இப்பகுதிகள் இரண்டாம் கட்டமாக கடந்த புதன்கிழமை (15) தொடக்கம் மீண்டும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அதேவேளை வெள்ளிக்கிழமை (17) கல்முனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பகுதி, பொதுச் சந்தை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைப் பகுதி உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் பிரதான வீதி உள்ளிட்ட முக்கிய பாதைகளும் கல்முனை பொதுப்பணி மன்றத்தின் பங்களிப்புடன் மாநகர சபையினால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப் பிரிவு