கத்தார் நாட்டில் சுற்றுலா விசாவில் இருப்பவர்கள் விசாவினை நீட்டிக்க தேவையில்லை..!! அரசின் அறிவிப்பு வரும் வரையிலும் தொடர்ந்து தங்க அனுமதி..!!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டிற்கு விசிட் விசாவில் வந்து தற்பொழுது இருக்கும் விமான போக்குவரத்து தடை மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் காரணமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பல பேர் தவித்து வருகின்றனர். அவ்வாறு கத்தார் நாட்டில் விசிட் விசாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசிட் விசாவினை நீட்டித்து கொள்ளாமலும் கட்டணம் ஏதும் செலுத்தாமலும் தொடர்ந்து தங்கி கொள்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது முன்கூட்டியே விசா பெற்று (Priorly Issued) வந்தவர்களுக்கும், மற்றும் வருகை விசாவில் (Arrival Visa) வந்தவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில், “தற்போதய நிலைமைகள் மாறி நாட்டில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டு, சுற்றுலா விசாவில் இருப்பவர்களின் சொந்த நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.