ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை தற்போது மீண்டும் திறக்கப்பட இருப்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தவறாக முகக் கவசம் அணிபவர்களுக்கு 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய துபாய் காவல் அதிகாரி,” மக்கள் வெளியில் செல்லும் போது சரியான முறையில் முகக் கவசம் அணியாத பட்சத்தில் அவர்களுக்கு 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்” என்றார். பொது இடங்களில் மக்கள் முகக் கவசத்தை சரிவர பயன்படுத்துவதில்லை. சிலர் மூக்கு அல்லது வாய் வெளியே தெரியும்படி அணிகிறார்கள் இது தவறான முறையாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூக்கையும் வாயையும் மூடாதவாறு முகக் கவசம் அணிபவர்கள் ஹெல்மெட்டை கையில் தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களைப் போன்றவர்கள் எனக் குறிப்பிட்டார் மேலும் அவர் குறிப்பிடுகையில் சில முகக் கவசங்கள் முகத்தில் சரிவர பொருந்துவதில்லை. குறிப்பாக துணி தொய்வடைந்தவுடன் அதன் இறுக்கம் தளர்ந்து முகத்திலிருந்து கீழே இறங்குகிறது. மக்கள் தரம் குறைந்த முகக் கவசங்கள் அணியும்போது இப்படி முகத்தை விட்டு அடிக்கடி கீழே இறங்கும். ஒரு கட்டத்தில் இதனால் மக்கள் வெறுப்படைந்து அதனைக் கழற்றி விடுகிறார்கள்” என்றார்.
முகக் கவசம் அணியும் போது “முகக் கவசத்தில் உள்ள உலோகப்பட்டை மூக்கின் மேற்பகுதியில் படும்படி வைத்து, பின்பக்க எலாஸ்டிக் கையிற்றை காதைச் சுற்றி இருக்கும்படி பொருத்திக்கொள்ள வேண்டும்” எனவும் ஜார்ஜ் தெரிவித்தார்.
“கொரோனா உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், மக்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. முகக் கவசப் பயன்பாடு சரியான விதத்தில் இருக்கும்பட்சத்தில், நோய்த் தொற்றிற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்” என மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறை அதிகாரி,”மக்கள் சரியான முறையில் முகக் கவசங்களை அணிய வேண்டும். காரில் பயணிக்கும் போதும் ஓட்டுனர் மற்றும் பிரயாணிகள் முகக் கவசத்தை அணிய வேண்டும்” என்றார்.
கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு முதலில் எச்சரிக்கை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவற்றை செய்யும் நபர்களிடம் இருந்து உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
“நாங்கள் முதலில் விதிகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை அபராதங்களை விதிக்கிறோம். ஆகவே அவர்கள் இந்த விதிமுறை பற்றித் தங்களுக்கு தெரியாது என சொல்ல முடியாது. மீண்டும் அவர்களால் இந்த விதி மீறப்படும் பொழுது உண்மையான அபராதத்தை அவர்களிடமிருந்து வசூலிக்கிறோம்” என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.