Ads Area

அமீரகத்தில் தங்கியிருப்போரின் விசா காலம் முடிவடைந்தால் கூட எந்தவித அபராதமும் விதிக்கப்படாது.

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் தங்களுடைய விசா காலம் முடிவடைந்து இருந்தாலும் அவர்கள் எவ்வித அபராதம் செலுத்தாமல் நாடு திரும்பலாம் என அமீரக ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Khalifa bin Zayed Al Nahyan) கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இப்படி காலாவதியான விசாவைக்கொண்டிருந்து, அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய தடை இல்லை என குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் செய்தித்தொடர்பு, அடையாள மற்றும் குடியுரிமை அதிகாரி கர்னல் காமிஸ் அல் காபி (Khamis Al Kaabi) அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி மார்ச் 1, 2020 க்கு முன்பு காலாவதியான நுழைவு மற்றும் ரெசிடென்ட் விசாக்களைக் கொண்டவர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாமல் மே 18 க்குப் பிறகு தாயகம் திரும்பலாம். அடுத்த மூன்று மாதத்திற்கு இந்த சிறப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாவதியான எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) மற்றும் வேலைக்கான விசாக்களைக் (work permits) கொண்டவர்களுக்குமான அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய காபி,” விசா காலாவதியாகி, அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் அமீரகம் வர எந்தத் தடையும் இல்லை. ஆனால் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய விருப்பப்படுபவர்கள் பழைய சட்டம் வகுத்திருக்கும் விதிமுறைகளுக்குத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்” என்றார். மேலும், இத்திட்டம் இயங்கும் விதம் மற்றும் இச்சேவையைப் பெற உதவும் மையத்தினைப் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளைப் பெற, அரசின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான  (Federal Authority for Identity and Citizenship) இணைய தளத்தினைப் பயன்படுத்தலாம்” என காபி வலியுறுத்தினார்.

சாதாரண நாட்களில் அதாவது கொரோனாவிற்கு முன்பாக, காலாவதியான விசா மற்றும் காலாவதியான நுழைவு அனுமதி கொண்டோர் அமீரக குடியேற்றச் சட்டத்தின்படி நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து துபாய் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (GDRFA) இயக்குனரான மேஜர் ஜெனரல் முகமது அகமது மாரி (Major General Mohammad Ahmad Al Marri) பேசுகையில்,”  இந்தப் புதிய திட்டத்தின் மூலமாக காலாவதியான விசாக்களைக் கொண்டவர்கள் பயனடைய முடியும். கொரோனா பாதிப்பிற்கு மத்தியிலும் இப்படியொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை நம் தலைவர் எடுத்திருக்கிறார். காலாவதியான விசா வைத்திருப்போருக்கும் நாடு உதவிகளை வழங்குகிறது ” என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe