Ads Area

பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கிப் பயன்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு.

அதானுக்கு மாத்திரமே பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியை பயன் படுத்தலாம். பிரசாரங்களுக்கு அனுமதி இல்லை என வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் பணிப்பாளர் எ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியினூடாக இமாம்களால் ஸலவாத், துஆ மற்றும் மார்க்க உபதேசங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு நாட்டின் சில பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன நிராகரித்துள்ளன.

இதுதொடர்பாக ஏனையோரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அகில இலங்கை உலமா சபை, ஷரீஆ கவுன்சில் மற்றும் தரீக்காக்களின் உயர் மன்றம் ஆகிய அமைப்புக்களின் உலமாக்களோடு கடந்த 12ஆம் திகதி வக்புசபை கூட்டமொன்றை நடத்தியது.

ரமழானின் மீதமுள்ள நாட்களை அமைதியாகவும் சமாதானமாகவும் கழிப்பதற்காகவேண்டி, பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் தவிர்ந்த வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை என்றும் ஈதுல் பித்ர் பெருநாள்வரை வீடுகளில் இருந்தவாறு ஆன்மிக மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் முஸ்லிம்கள் வேண்டிக்கொள்ளப்படவேண்டும் என்றும் இதன்போது அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.

அதற்கமைய அதான் மற்றும் கொவிட் 19 தொடர்பாக அதிகாரிகளால் வேண்டப்படுகின்ற பொது அறிவித்தல்கள் அல்லாத வேறு எந்த நோக்கத்துக்காகவும் எந்தவொரு பள்ளிவாசலிலும் ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என வக்புசபை தீர்மானித்தது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 15 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட வக்புசபை பணிப்புரைகள் மாற்றமின்றி மறு அறிவித்தல்வரை நடைமுறையில் இருக்கும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe