Ads Area

சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்றவற்றுக்கான திடீர் விஜயத்தின் நோக்கம் என்ன..??

அரசியல்வாதிகளுக்கு “அலமடி” கட்டுகின்ற நாங்கள், சமூக பிரச்சினையில் அக்கறை செலுத்தாதது ஏன் ?

பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, பதில் பொலிஸ்மா அதிபர் உற்பட பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட தூதுக்குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை (14.05.2020) அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்றவற்றுக்கு விஜயம் செய்தனர்.

இது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் உத்தரவின் அடிப்படையிலான விஜயமாகும். ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக படை அதிகாரிகளின் இந்த விஜயத்தின் உள்நோக்கம் குறித்து எந்தவொரு எழுத்தாளர்களும் திரும்பிப்பார்க்கவில்லை.

அரசியல்வாதிகளுக்கு “அலமடி” கட்டத் தெரிந்த எழுத்தாளர்களான நாங்கள் எவரும் சமூகரீதியிலான பிரச்சினைகள் பற்றி ஆர்வம் காட்டுவதில்லை. சமூகத்தைவிட, கறைபடிந்த அரசியல்வாதிகளின் எலும்புகள் எங்களுக்கு இனிப்பாகத் தெரிவதுதான் இதற்கு காரணமாகும்.

குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பௌத்தர்கள் என்றவகையில் அவர்களது மதவழிபாட்டு தளங்களுக்கு செல்வதில் எந்தவித தவறுமில்லை. ஆனால் முஸ்லிம்களுடன் உரசல் பட்டுக்கொண்டிருக்கின்ற விகாரைகளுக்கு சென்றதுதான் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் நாட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையிலும், முஸ்லிம்கள் மீது இனவாத வெறுப்புணர்வுகளை விதைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற நிலையில் சர்ச்சைக்குரிய விகாரைகளுக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் விஜயம் செய்துள்ளார்கள்.

கவனிப்பாரற்று பாழடைந்து கிடந்த அம்பாறையை அண்டிய தீகவாப்பி விகாரையை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் அபிவிருத்தி செய்தார். இது அப்போது சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டது.

கடந்த 2016 இல் பௌத்தர்கள் வசிக்காத இடமான இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் உள்ள மாயக்கள்ளி மலையில் திடீரென புத்தர் சிலையை வைத்தார்கள். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பீதியை உண்டுபண்ணியது.

மேலும், மிக நீண்டகாலமாக இருந்துவருகின்ற பிரச்சினைதான் பொத்துவில் முகுது மகா விகாரையாகும். இந்த விகாரைக்கு எல்லைக்காணி வரைபடரீதியாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதன் எல்லை தேவைக்கேற்ப அடிக்கடி விஸ்தரிக்கப்படுகின்றது.

முகுது மகா விகாராதிபதியை மீறி அங்கு பொத்துவில் பிரதேச சபையினால் எந்தவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.

“தொல்பொருள் பிரதேசங்கள் எந்த இன மதத்துக்குரியதாக இருந்தாலும் அது பாதுகாக்கப்படும்” என்று அங்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன உறுதியளித்ததுடன், நாட்டில் உள்ள தொல்பொருள் வரலாற்று தளங்கள் மீது பரவலாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருவதாக விகாராதிபதிகளால் அங்கு பேசப்பட்டது. .

தொல்பொருள் என்பது பௌத்தர்களை அடிப்படையாக கொண்டது. எனவே “எந்த மதத்துக்குரியதாக இருந்தாலும்” என்ற வசனத்தை பிரயோகித்தாலும் அது பௌத்தர்களை பாதுகாப்பது என்றே அர்த்தம் கொள்ள முடியும். அத்துடன் இவர்கள் முஸ்லிம்களை விரல்நீட்டி அங்குள்ள அனைவரும் கருத்து தெரிவித்ததாக அறியக்கிடைக்கின்றது.

எனவே இந்தநாட்டு முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நீண்ட திட்டமிடள்கள் எங்களை சுற்றி நடைபெற்று வருகின்றது. ஆனால் நாங்கள் இவைகளை பற்றி சிந்திக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe