Ads Area

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் - 16 ஆண்டுகளாக நோன்பு வைக்கும் திருமாவளவன்.

சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 16-வது ஆண்டாக  2 நாட்களுக்கு நோன்பு வைக்கிறார்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். மேலும், பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வரும் நிலையில், 16-வது ஆண்டாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நோன்பு வைக்கிறார். வழக்கமாக 3 முதல் 5 நாட்கள் வரை திருமாவளவன் நோன்பு வைப்பது வழக்கம். இந்தாண்டு மட்டும் 2 நாட்கள் நோன்பு வைக்கிறார்.

மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தவாறு இந்தாண்டு நோன்பு வைக்கிறார். வழக்கமாக இவர் சென்னையில் இருந்தால் சஹர் (அதிகாலை உணவு), இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சிகள் களை கட்டும்.

சாம்கோ, அபுபேலஸ் போன்ற உணவகங்களில் திருமாவளவனோடு சேர்ந்து சஹர் உணவு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய படையே குவியும். அதேபோல் தன்னுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe