Ads Area

குவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடிய அபாயம்..!! - சட்டம் ஒப்புதல்.

இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான பல புதிய சட்ட திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் சமீப காலமாக அறிவித்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் அரசு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு குடிமக்களை பணியமர்த்தல், முனிசிபாலிடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்து அதற்கு பதிலாக குடிமக்களை நியமனம் செய்தல், வெளிநாட்டவர் மக்கள்தொகையின் அளவைக் குறைப்பதற்கான திட்டம் போன்ற பல திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருக்கின்றது.

மேலும், குவைத்தில் வெளிநாட்டவர்களின் பணியிடங்களுக்கான புதிய ஒதுக்கீடு முறையை (quota system) அறிமுகம் செய்யவிருப்பதாக குவைத் அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வெளிநாட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு முறைக்கு அழைப்பு விடுக்கும் வரைவுச் சட்டம் ஒன்று தற்பொழுது தேசிய சட்டமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மசோதா, சம்பந்தப்பட்ட குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பான சட்டம் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் படி, குவைத்தில் அதிகளவு எண்ணிக்கையில் இருக்கும் இந்தியர்கள் தேசிய மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இந்த மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டால், சுமார் 800,000 இந்தியர்கள் நாட்டை விட்டு சட்டப்படி வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 4.8 மில்லியன் மக்களில், 3.3 மில்லியன் பேர் வெளிநாட்டினர் மற்றும் குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது 1.45 மில்லியன் ஆகும். மேலும், குவைத் நாட்டில் அதிகளவிலான தமிழர்கள் வீட்டு தொழிலாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த மசோதா இயற்றப்பட்டால் இலட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த மாதம், குவைத் பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் சபா அவர்கள், குவைத் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதமாக இருக்கும் மக்கள் தொகையினை 30 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2.5 மில்லியன் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் - www.khaleejtamil.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe