Ads Area

பெண்கள் வாழ்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த சவுதி அரேபியா.

CEOWORLD இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள பெண்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்டியலில், அரபு நாடுகளின் அளவில் சவூதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் சவூதி பிடித்திருக்கும் இடம் 89 ஆகும்.

அரபு நாடுகளில் ஓமன் மற்றும் ஜோர்டன் நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. உலக அளவில் இவை 91 மற்றும் 96 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.


அரபு நாடுகள் அளவில் பெண்கள் வாழச் சிறந்த நாடுகளின் பட்டியல் :


நாடுகள்                                                            வளைகுடா                                     உலக நாடுகள் 


சவூதி அரேபியா                                    01                                               89
ஓமன்                                                         02                                               91
ஜோர்டன்                                                  03                                               96
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்                       04                                               100
கத்தார்                                                        05                                               107
குவைத்                                                      06                                               111
லிபியா                                                       07                                               117
எகிப்து                                                        08                                                124
பஹ்ரைன்                                                09                                                128

உலகளவில் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் :

CEOWORLD இதழ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, சுவீடன் நாடு உலக அளவில் பெண்கள் வாழ்வதற்குத் தகுந்த நாடாக முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. நார்வே நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின் முதல் 10 இடங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவை, பின்லாந்து (6 ஆவது இடம்), சுவிட்சர்லாந்து (7 ஆவது இடம்), ஃப்ரான்ஸ் (9 ஆவது இடம்) மற்றும் ஜெர்மனி (10 ஆவது இடம்). இவை தவிர கனடா 5 ஆவது இடத்தையும், நியூசிலாந்து 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

2020 ஆம் ஆண்டின் இந்தத் தர வரிசைப் பட்டியலில், லக்ஸம்பெர்க் 11 ஆவது இடத்தையும், ஆஸ்திரியா 12 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. 13 மற்றும் 14 ஆவது இடங்களில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன. பெண்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த 20 நாடுகளின் பட்டியலில், 15, 16 மற்றும் 17 ஆவது இடங்களில் முறையே ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன.

உலகம் முழுவதும் பெண்களிடம் கருத்துக்கணிப்பு.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அவர்கள் மீதான பாகுபாடும் உலக அளவில் எங்கும் காணப்படுகின்றன. ஆனால், அவற்றின் வீதமும் தீவிரமும் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. பெண்ணுடல் சார்ந்து நிகழும் புறக்கணிப்புகளையும், பாலின சமத்துவத்தையும் தீர்மானிப்பதில் பிராந்திய, இன மற்றும் சமூக-பொருளாதார காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வெளிப்படையாக சொல்லப்போனால், பெண்கள் 100% பாதுகாப்புடனும், ஆண்களுக்கு நிகரான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு ஏற்ற நாடு என்று உலகில் எதுவும் இல்லை. ஆனால், சம உரிமைகள், சமூகத்தில் பங்கு மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றைப் பெண்களுக்கு வழங்குவதில் பிற நாடுகளை விட சில நாடுகள் சிறந்ததாக உள்ளன. உலகம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 256,700 பெண்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலை CEOWORLD இதழ் வெளியிட்டுள்ளது.

எதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரானது ?

பெண்களுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலை உருவாக்குவதற்காக சுமார் 156 நாடுகளுக்கு கீழ்கண்ட 9 பண்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அவை,

01. பாலின சமத்துவம்

02. சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்களின் சதவீதம்

03. பாதுகாப்பு உணர்வு  (15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், இரவில் தனியாக வெளியில் நடமாடுகையில் பாதுகாப்பாக உணர்கின்றனரா என்பதைத் தெரிவித்துள்ளனர்.)

04. வருமான சமத்துவம்.

05. மனித உரிமைகள் பற்றிய அக்கறை.

06. பெண்களுக்கான அதிகாரம்

07. சராசரியாக பெண்கள் கல்வி பயிலும் ஆண்டுகள்

08. 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் சம்பளம் ஈட்டும் வேலையில் ஈடுபடுவது.

09. பெண்களுக்கு சமூகத்தில் பங்களிப்பு

ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்.

இந்தப் பட்டியலில் ஸ்காண்டிநேவிய நாடுகள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளன. சில சிறந்த நாடுகள் முக்கியமான பகுதிகளில் பின்தங்கியிருந்தாலும், பெண்களுக்கான மோசமான நாடுகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த நவீன காலத்தில் பெண்கள் அதிக அளவில் முன்னேறியுள்ளதோடு, ஒப்பீட்டளவில் அதிக சுதந்திரமும் பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில், இந்த முன்னேற்ற விகிதம் மிகவும் குறைவானதாக  உள்ளது. எளிமையாகச் சொல்வதென்றால், உலக மக்கள்தொகையின் பாதி பேர் பாதுகாப்பற்ற உணர்வோடு வாழ்கின்றனர். பாதி மக்கள் தினமும் அச்சத்துடனேயே வாழும் இந்த உலகத்தை உயிர் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக நாம் ஒருபோதும் மாற்ற முடியாது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. பாதுகாப்பு, நீதி மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகெங்கிலும் பெண்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களின் அளவை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகள் சிறப்பாகச் செயல்படுவதைக் காணலாம். இதற்கு நேர்மாறாக, சில வளர்ந்த நாடுகள் பெண்கள் சுதந்திரத்துடன் வாழ்வதற்கான ஒரு முழுமையான சூழலை உருவாக்கும் போட்டியில் இன்னும் பின்தங்கியுள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது.

தகவல் - சவுதி தமிழ் வெப்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe