Ads Area

அரசியல் பின்புலமும் பாரிய பணச் செலவுமின்றி பாராளுமன்றம் நுழைந்த முஷர்ரப்.

சம்மாந்துறை அன்சார்.

பாராளுமன்றக் கதிரையில் மக்கள் பிரதிநிதியாக அமர பல அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பல பிரயத்தனங்களை செய்தும் இன்று வரை பலரால் அந்தக் கதிரையை அலங்கரிக்க முடியாதிருக்கின்ற நிலையில் மிகக் குறுகிய காலத்தில் அரசியலுக்குல் தள்ளப்பட்டு எந்தவித அரசியல் பிண்ணனியோ, பணபலமோ இன்றி தற்போது  பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக தனக்கென்றொரு இடத்தைப் பிடித்துள்ளார் பா.உ. முஷர்ரப் முதுநபீன். இக் கட்டுரை அவரது குடும்பப் பிண்ணனி, ஊடகத்துறை, அரசியல் வருகை போன்ற பல்வேறு விடையங்களை தொட்டுச் செல்லவிருக்கின்றது. 

குடும்பப் பிண்ணனி.

1983 ம் ஆண்டு பொத்துவிலில் பிறந்த பா.உ. முஷர்ரப் முதுநபீன் அவர்களுக்கு தற்போது 37 வயதாகின்றது, குடும்பத்தில் இளையவரான இவருக்கு ஒரு சகோதரரும், இரு சகோதரிகளும் உள்ளனர். முஷரப் அவர்கள் உயர்தரம் படிக்கும் போது அவரது பாடசாலைக் காலத்திலேயே தந்தை மரணமடைந்து விட்டார் இதனால் குடும்பச் சுமையை அவரது மூத்த சகோதரரே பாரமெடுத்து கவனித்து வந்துள்ளார்.

கல்வி நிலை.

முஷர்ரப் முதுநபீன்  தனது ஆரம்ப கல்வியை பொத்துவிலில் உள்ள இர்பான் வித்தியாலயத்திலும் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரியிலும் பயின்றார் அதன் பின்னர் தனது உயர் கல்வியை மருதமுனை அல்மனார் கல்லுாரியில் பயின்றார். உயர்தர கல்விக்குப் பிறகு ஊடகத்துறையில் இருந்த ஈடுபாட்டால் வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றினார் அவ்வாறு பணியாற்றும் காலகட்டத்தில்தான் சட்டத்துறையில் கல்வி கற்று தற்போது சட்டத்துறையில் பட்டமும் பெற்றுள்ளார்.

ஊடகத்துறை.

ஊடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட முஷரப் முதுநபீன் தனது உயர்தரக் கல்வியின் பின்னர் வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார் அதில் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அவர் தொகுத்து வழங்கி வந்த “யாதும் ஊரே யாவரும் கேளீர்” நிகழ்ச்சி மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. இலங்கையில் உள்ள பல ஊர்களின் வரலாறு பாரம்பரியம் போன்றன இந் நிகழ்ச்சியின் ஊடாக இவரால் எடுத்துரைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சி இலங்கையில் உள்ள பல ஊர்களுக்கு செல்வதற்கும், அந்தத்த ஊரின் வரலாறு, பாரம்பரியம், கலைக்கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் அவருக்கு வழிவகுத்தது. யாதும் ஊரே யாவரும் கேளீர் நிகழ்ச்சி போன்றே அவர் நடாத்தி வந்த “அதிர்வு” நிகழ்ச்சியும் “பத்திரிகைச் செய்திகளின் கண்ணோட்டம்” போன்ற நிழ்ச்சிகளும் அவருக்கு பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இவர் அரசியல் நிகழ்ச்சியான அதிர்வில் தொகுத்து வழங்கும் போது பல்வேறு அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள் போன்றோரை நோக்கி பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களை திக்குமுக்காட வைப்பதுமுண்டு.

வசந்தம் தொலைக்காட்சியிலிருந்து பணி நீக்கம்.

இவர் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்த “பத்திரிகைக் கண்ணோட்டம்” நிகழ்ச்சியில் நாளேடுகளில் வருகின்ற செய்திகளில் முக்கிமானவைகளின் தலைப்புக்களை வாசித்து அது தொடர்பான விளக்கங்களையும் வழங்குவதுண்டு இவ்வாறு விளக்கங்களை வழங்கும் போது குறித்த ஒரு கட்சியின் தலைவர் தொடர்பாக சில தகவல்களையும் தெரிவித்திருந்தார் அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அந்த நேரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது, குறித்த அந்தக் கட்சியின் தலைவரது ஆதரவாளர்கள் முஷரப் அவர்களை விமர்ச்சிக்கத் தொடங்கி அது பெரும் பேசுபொருளாக மாறியதனால் அவர் பணியாற்றி வந்த வசந்தம் தொலைக்காட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். குறித்த கட்சியின் தலைவர் தனது செல்வாக்கைப் பயண்படுத்தித்தான் அவரை வசந்தம் தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியல் வருகை.


வசந்தம் தொலைக்காட்சியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இவரை அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பத்தியூத்தின் அரவணைத்துக் கொண்டார், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு அக் கட்சியின் தலைவரால் கட்சியின் “கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர்” பதவி வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய முஷரப் தொடர்ந்தும் கட்சிப்பணிகள் செய்து வந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியதையடுத்து அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சார்பாக பொத்துவிலில் மயில் சின்னத்தில் 9ம் இலக்க பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இவரது சிறந்த பேச்சாற்றல் அனைவராலும் கவரப்பட்டது, பொத்துவில் பிரதேச இளைஞர்கள், பெரியோர்கள், பெண்கள் என அனைவரும் இவரை ஆதரிக்கத் தொடங்கினர். தேர்தல் காலத்தின் பொத்துவில் பிரதேசத்தில் தொல்பொருள் செயலணியினரின் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் முஷரப் மக்களோடு களத்தில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் இவருக்கு மேலும் மக்கள் செல்வாக்கும், ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. தேர்தல் பிரச்சார மேடைகளின் கூட மக்களை சிந்திக்கத் துாண்டும் படி மிக காத்திரமான முறையில் உரையாற்றும் உத்தியினையும் இவர்  கையாண்டிருந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர் அதி கூடிய விருப்புவாக்குகளைப் பெற்று தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வெற்றியும் ஈட்டியுள்ளார்.

பா.உ. முஷர்ரப் முதுநபீன்  பொத்துவில் பிரதேசத்திலிருந்து தேர்தலில் களமிறங்கி மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது மற்றும் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார் இதற்கு முதல் 1977ஆம் ஆண்டு எம். கனகரத்தினம் அவர்கள் முதலாவதாக பொத்துவிலில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் அவருக்குப் பிறகு முஷர்ரப்தான் மக்களால் நேரடியாக வாக்களித்து பெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினராவார். 

இவர்களைத் தவிர பொத்துவில் எஸ் எஸ் பி மஜீத், மர்ஹும் எம்.பி.ஏ.அஸீஸ் ஆகியோரும் பொத்துவில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருந்த போதும் அவர்கள் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாது தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்குல் நுழைந்தவர்களாவர்.

முஷர்ரப் 47 ஆண்டுகளுக்கு பின்னர் பொத்துவில் மண்ணுக்கு நேரடியாக மக்கள் ஆணையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாவார்.


அன்சார்
சம்மாந்துறை 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe