தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் சிங்காரச் செல்வம் கடந்த பிப்ரவரியில் கனரக வாகன ஓட்டுனர் பணிக்காக சவூதி அரேபியா, ரியாத்திற்கு வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்த பொழுது தனது வாகனம் ரியாத்திக்கு அருகே ரூமாஹ் என்ற பகுதியில் பழுதடைந்துள்ளது.
அதனை சரி செய்வதற்காக வாகனத்தின் அடியில் சென்ற சகோதரர் எதிர்பாராத விதமாக வாகனத்தின் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் ஆகி விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜித்தாவில் உள்ள அச்சகோதரரின் அண்ணன் சகோ. ராஜா அவர்கள் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க அவசர இரத்தனமாக 6 யூனிட் இரத்தம் இரண்டு கட்டங்களாக ரியாத் மண்டலம் பத்தாஹ் கிளையின் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
மேலும், தற்போதைய கொரோனோ நோய்ப் பரவலின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக விரைவாக தாயகம் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்னாரின் குடும்பத்தார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்கள்.
அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது இயக்கப்படும் தனி விமான ஏற்பாட்டாளர்கள் மூலம் அவர்களின் உதவியுடன் இலவசமாக விமானத்திற்கான பயணச் சீட்டு பெறப்பட்டு தாயகம் கொண்டு செல்வதற்கான சட்டரீதியான அனைத்து பணிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு முடித்தது.
இந்த உன்னதமான மனிதநேயப் பணியை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சகோதரர் ராஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகிகளை மண்டல அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசும் பொழுது, தாங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பேருதவி. இது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாம் அனைவரும் ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற சகோதரத்துவத்துடன் மட்டுமே இப்பணி மேற்கொள்ளப்பட்டது தவிர, வேறு எந்த பலனையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்றும் இதற்கான கூலியை இறைவனிடத்தில் மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்றும் அவருக்கு ஆறுதல் கூறப்பட்டது.
மருத்துவமனையில் மேல் சிகிச்சைப் பெற்று வரும் அச்சகோதரர் முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மற்றும் ஜித்தா மண்டல வழிகாட்டுதல் மற்றும் உதவியின் மூலம் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





