Ads Area

தேசிய அரசியலில் தடம்பதிக்க சம்மாந்துறையில் யாரும் இல்லையா..??

விரால் இல்லாத குளத்திற்கு சுங்கானும், 
பனையானும் தான் பெரிய ஆள்!

தேசிய அரசியலில் தடம்பதிக்கும் கதாநாயகர்களாக சம்மாந்துறையில் இனியும் யாராவது இல்லையா? இந்த வினாவுக்கு எம்மில் பலரிடம் பதிலில்லை. காரணம் ஒற்றுமையில்லை. 

இவ்வளவு காலமும் கட்சி சார்ந்து பேசிய போராட்டங்கள் எல்லாம் போதும். இனியாவது திடவுறுதியுடன் பயணிக்கும் நிலைமையை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்வோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் வரையறைகளுக்குள் பெரும் சக்தியை தன்வசம் வைத்திருந்த மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் கிழக்கின் ஒருவர்.

அவருடைய அரசியல் அடித்தளங்கள் அவற்றின் நகர்வுகள், அடுத்த கட்ட உச்ச எல்லைகள் இவ்வாறு அளவிட முடியாத துணுக்குகள் அன்றைய அரசாங்கத்தில் சிலாகித்தன. 

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சில அரசியலாளர்கள் தங்களை தாங்களே ஜாம்பவான்களாக எண்ணிக்கொண்டு ‘பச்சைத் தண்ணியில் பணியாரம் சுடுவது போல’ சிலாகித்துக் கொள்கின்றனர். மமதையால் சமூகத்தை கூறு போடுகின்றனர். 

இப்போது விடயத்துக்குள் வருகின்றேன். பலரது கணிப்பீடுகளின் படி தகுதியானவர்கள் மக்கள் ஏற்றுக் கொள்ளும் மாண்பு கொண்டவர்கள் இன்று நமதூர் அரசியலில் இல்லை என கூறுகின்றனர். 

32 வருட காலமாக சம்மாந்துறைத் தொகுதி அழகு பார்த்த அப்துல் மஜீட் எம்.பி. போல இன்று எவரும் இல்லை. 

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தனித்துவமாக அரசியல் கட்சியை ஸ்தாபித்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் போன்ற எமது பிரதேச விரூட்சம் போல் எவரும் இல்லை. 

காலம் குறுகியதாயினும் சேவையால் சம்மாந்துறையை மிளிர வைத்த மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் போல ஒருவர் இல்லையே. 

இப்படி ‘இல்லை’ எனும் வார்த்தை இனியும் நம்மிடம் இல்லாமல் போக வேண்டும். மரபு வழி அரசியல் இனியும் வேண்டாம். எமக்குள்ளிருந்தும் ஆளுமைகள் இனங்கானப்பட வேண்டும். அதற்கு இனிதொரு களம் செய்வோம்!

குறிப்பாக சொன்னால் இன்று அரசியல் நிர்க்கதிக்குள் சம்மாந்துறையை சில தலைவர்கள் தள்ளிவிட்டனர். இதற்கு சான்று மன்சூரின் தோல்வியும், மாஹிரின் தோல்வியும். கோழிக் கால் வேலி போன்று பயிரிடப்படாத பாசனைக்கு அர்த்தம் தேடும் சமூகமா நாம்!

ஊருக்கு எம்.பி. வேனும் என்பதை மக்கள் உணரவில்லை. அதை ஊர் தலைமைகள் உணர்த்தவும் இல்லை. வேட்பமனு தாக்கல் செய்த மறுதினமே பௌதீக காரணிகள் உணர்த்திவிட்டது ஊருக்கு எம்.பி. இல்லை என்பதை. 

இதனை சில வெளியூர் அரசியல்வாதிகள் “பானுக்குள் வைத்த தேன் போல ருசித்துவிட்டனர்.” 

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தன்னை ஒரு பெரிய அரசியல்வாதியாக சித்தரிக்க முனைகின்ற சிலர், உள்ளூரில் தனக்குத் தெரிந்த ஓரிரு அரசியல்வாதிகளின் வால்பிடியாக இருந்து கொண்டு கோட்டை கட்ட எண்ணி ஊரையும் இரண்டாக்கி, சமூகத்தையும் துண்டாக்க முனைந்துள்ள சிலர். 

இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணி சுகபோகங்களுக்காக மக்கள் விலை பேசப்படுவதேயன்றி வேறில்லை. இவையெல்லாம் தூக்கி வீசிவிட்டு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒரு விடயத்தை நாம் உணர வேண்டும்!

முஸ்லிம் காங்கிரஸில் மன்சூர் எனும் அடிப்படையான, அரசியல் தெரிந்த ஒரு பிரமுகர் இருப்பது போல…

இனி வரும் காலங்களில் சம்மாந்துறை மண்ணில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் துணுக்கீற்றில் சான்று சொல்லும் ஒரு தானைத் தளபதி இம் மண்ணை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். 

அதே போல தேசிய கட்சிகளில் பலம்பெற்றிருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஒரு செயல்வீரன் காலூன்ற வேண்டும். 

இங்கு இந்த கட்டுரையை விமர்சிக்க பலர் முனைவீர்கள்… “கூஜா தூக்குவதாகவும், பூசி மினுக்குவதாகவும்” கூறலாம். விமர்சனங்களை நான் "……ர் என்றும் கணக்கெடுக்க மாட்டேன்”

நான் இவற்றை கூறக் காரணம் என்னவென்றால்,

தேசிய அரசியல் வகிபாகிக்கும் பல நிகழ்வுகளில் நான் கண்ட எமது ஊரின் இயலாமை நிலை. துரும்பாயின் அது ஒரு மருந்து என எண்ணினால்தான் அது நமக்குப் பெறுமதி. நாம் அத்தனை பேரும் இரு பெரும் தேசிய கட்சிகளை கணக்கிலெடுக்காமல் இருக்கலாம். விலத்தியும் இருக்கலாம். இதனால் நஷ்டமடையப் போவது எமது பிரதேசம்தான். 

அந்த சந்தர்ப்பத்தில் தன்னால் சுமக்க முடியாத (‘கண் பசியேறிய’) பாரத்தைச் சுமந்த ஒருவர் இவ்வளவு பெரிய ஊரை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அரசியலுக்குள் நுழைகிற போது, குறித்த நபர் முதலில் அவரை அடையாளப்படுத்த ஆயிரத்தெட்டு விளக்கங்கள். 

அடையாளப்படுத்தி முடியிறதுக்குள்ள ‘மீடிங்’ முடிஞ்சிறும். பிறகு எங்க பிரச்சினைய பேசுற. திக்கித்தடுமாறி, மல்லுக்கட்டி வார்த்தைய வெளியால எடுக்க 10 நிமிசம் ‘மீடிங்’ முடிஞ்சிறும். இப்படி தடுமாற்றங்கள் பல!.

இதை வைத்து தயவு செய்து யாரையும் விமர்சிக்காதீர்கள். 

இவ்வளவு பெரிய ஊரான இந்த சம்மாந்துறையில் பிரதான தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்ற கட்சிக்கு பெறுமதியான ஒருவரை இனங்கண்டு கொடுங்கள். 

மாறாக அடித்தாலும், பிடித்தாலும் அசைவற்ற பித்தளை போல இருந்தால் அவ்வளவுதான். அப்புறம் ‘விரால் இல்லாத குளத்திற்கு சுங்கானும், பனையானும் தான் பெரிய ஆள்’ 

மண்ணிக்கவும்! 

இது சம்மாந்துறை மேல் நான் கொண்ட பற்றினால் நான் கண்ட அவல நிலையை எண்ணி எழுதிய பதிவு.

வெளிப்படையாக அனைத்தனையும் எழுத முடியாது. காரணம் யாரையும் துச்சமாக எண்ணிவிடவும் கூடாது! “அரசியலும், அதிகாரமும் ஒரு நிகழ்தகவு” 

சற்று சிந்திப்போம்!. 

✍️ கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe