ஒவ்வொரு உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை நமது பண்பாடும் பாரம்பரியமும் வழங்கியிருக்கின்றன. நமது வாழ்வில் உறவுகளை தவிர்த்து எந்த ஒரு நிகழ்ச்சியும் நம் வீடுகளில் நடைபெறுவதில்லை.
திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார்-மருமகள். இந்த உறவு சிக்கல்களும், சண்டைகளும் நிறைந்தவை.
ஆனால் மருமகளை தன் மகள் போலவே எண்ணும் மாமியார், தன் தாய் போல நினைக்கும் மருமகள் என்று நினைக்கும் அளவிற்கு இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன தனது மருமகள் கிடைக்க மாமியார் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து உள்ளார். இது மூட நம்பிக்கை என்று கூறபட்டாலும் அன்பின் ஆழமான அடையாளமாகவும் இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் உள்ள என்ஐடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நிர்லா. இவரது மருமகள் ஜோதி. இவர் கடந்த 14ந்தேதி தனது குழந்தையுடன் காணாமல் போனார்.
அவர்கள் வெள்ளிக்கிழமை ஜோதியைத் தேடத் தொடங்கினர், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி காணவில்லை என ஜோதியின் கணவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இந்த நிலையில் மருமகள் மீது மிகுந்த அன்புவைத்து இருந்த லட்சுமி தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்சுமி அங்குள்ள சிவபெருமான் கோயிலில் தனது மருமகள் மீண்டும் கிடைக்க தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோதி காணாமல் போன பிறகு, லட்சுமி நிர்லா பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து சிவபெருமானுக்கு முன்பாக பிளேடைப் பயன்படுத்தி நாக்கை வெட்டினார்.
முதலில் லட்சுமி மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை, ஆனால் பின்னர் அவர் சமாதானப்படுத்தப்பட்டு ஜாம்ஷெட்பூரின் எம்.ஜி.எம்.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார் இருப்பினும், அந்தப் பெண்ணால் பேச முடியவில்லை என கூறப்படுகிறது.

