40 வயதான குவைத் பெண் ஒருவர் தனது வீட்டில் பணியாற்றிய இலங்கைப் பணிப் பெண்ணை சித்திரவதை செய்து, அவருக்கு தீக்காயங்களை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் மகன்களான சிறுவர்களும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிப்பெண் தூதரகத்திடம் உதவி கோரியதுடன் தான் கொடுமைப்படுத்தப்பட்டு, பணியாற்றிய வீட்டு எஜமானர்களால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் உள்விவகார அமைச்சுக்கு இது குறித்து அறிவித்த தூதரகம், இந்த சம்பவம் தொடர்பில் பூரண அறிக்கையொன்றை கையளிக்குமாறு கோரியிருந்தது.
அதன்படி, உள்விவகார அமைச்சு பாதுகாப்பு படையை அவ்வீட்டு அனுப்பியதுடன், இலங்கை பணிப்பெண்ணை பார்வையிடுமாறு கோரியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் கேட்டபோது, பணிப்பெண் விபரிக்கையில், முதுமையின் காரணமாக குவைத்திலிருந்து தான் நாடு திரும்பவேண்டும் என தனது எஜமானியிடம் கேட்டதாகவும், தனது கோரிக்கையை எஜமானி மறுத்ததுடன் தன்னை கொடுமைப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அப்பெண்ணின் தழும்புகள் மற்றும் தீக்காயங்களை பார்த்த பாதுகாப்பு பிரிவினர், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், வேண்டுமென்றே தீக்காயம் மற்றும் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
செய்தி மூலம் - https://gulfnews.com

