Ads Area

தொல்பொருள் செயலணியில் இருப்பவர்கள் போதாதென்று மேலும் நான்கு மகா சங்கத்தினர் நியமனம்.


கிழக்கு மாகாணத்தில் ,பவுத்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட செயலணிக்கு, மேலும் மகாசங்கத்தை சேர்ந்த 4 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!.

அஸ்கிரி பீடத்தின் தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாகசபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் கமல் குணரத்ண தலைமையில், 11 பேரைக் கொண்டதாக இந்த செயலணி அமைக்கப்பட்டது.இதில் பெளத்தர்கள் அல்லாத யாருக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்போது இதன் உறுப்பினர் தொகை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக இருந்த போதிலும், அங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களே(தமிழ் பேசுகின்ற மக்களே )பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணி முற்று முழுதாக சிங்கள உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அது ஒரு இனம் மற்றும் மதத்தின் நலனுக்காக மாத்திரமே நிறுவப்பட்டுள்ளமை புலப்படுகிறது.


ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த செயலணி, ஜனாதிபதிக்கு மாத்திரமே பதில் கூறும் வகையில் உள்ளது.அதன் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் யாரும் பிரயோகிக்க முடியாது .
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe