இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து தற்போதுவரையில் அமீரகத்திற்கு வந்து சிக்கிக்கொண்ட 112 இந்தியாவைச் சேர்ந்த பெண்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்பியிருப்பதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிக்கை செய்தி மற்றும் கலாச்சார அதிகாரி திரு. நீரஜ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இந்த 112 பேரில் 80 பேர் பாதுகாப்பான இடத்திற்கு முதலில் கொண்டுசெல்லப்பட்டதாகவும், மீதமுள்ள 30 பெண்கள் உடனடியாக இந்தியா திரும்பத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் துணைத் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
செப்டம்பர் 7,8 தேதிகளில் அமீரகத்திலிருந்து இரண்டு இந்தியப் பெண்களை, ஹைதராபாத் மற்றும் அம்ரிஸ்தருக்கு பத்திரமாக அனுப்பியிருப்பதாக நீரஜ் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு பெண்களில் ஒருவரான ராணி, நல்லவேலை வாங்கித்தருவதாக மோசடி ஏஜென்ட் ஒருவர் அளித்த வாக்குறுதியை நம்பி அமீரகம் வந்து தனித்து விடப்பட்டிருக்கிறார். அவருக்கு துணைத் தூதரகம் இருப்பிடத்தை அளித்திருக்கிறது. மற்றொரு பெண்ணான சந்தீப் கௌர், மருத்துவ காரணங்களினால் நாடு திரும்புகிறார் எனவும் நீரஜ் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அமீரகம் வரும் பெண்களில் பெரும்பாலானோர் இ-மைக்ரேட் சிஸ்டம் (e-migrate system) என்னும் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அமீரகம் வரும் பெண்கள் சிரமப்படக்கூடாது என்பதே தங்களின் விருப்பம் என நீரஜ் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
அஜ்மான் இந்திய சங்கத்தின் பொதுச்செயலாளரான ரூப் சித்து இதுகுறித்துப் பேசுகையில்,”அமீரகத்தில் தவித்துவந்த 60 பெண்களை தாயகம் அனுப்ப நாங்கள் உதவியிருக்கிறோம். வீட்டு பணிப்பெண்ணாக அமீரகம் வந்து கஷ்டத்திற்கு உள்ளாகும் பலரையும் நாங்கள் தினந்தோரும் பார்க்கிறோம். விசிட்டிங் விசா மூலமாக அமீரகம் அழைத்துவரப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏஜென்ட்களின் மாய வலையில் வீழ்ந்தவர்களே”
“அமீரகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கொஞ்ச காலம் வேலை செய்யும் இப்பெண்கள், இவர்களது சேவையைப் பிடிக்கும் வீட்டில் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி பணிபுரியும் பல பெண்கள் அந்த வீட்டாரால் சரியாக நடத்தப்படுவதில்லை. மொழிப் பிரச்சினையும் அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்” என்றார்.
“e-migrate system மூலமாக இந்தியப் பெண்களை வீட்டு வேலைகளுக்கு பணியமர்த்த தனிநபர், திரும்பப் பெறும் வகையில் 9,200 திர்ஹம்ஸ் கட்டணத்தை செலுத்தவேண்டும். இது பலராலும் இயலாத காரியமாகும். அதனாலேயே இடைத்தரகர்களிடம் சென்று இப்பெண்கள் சிக்கிக்கொள்கிறார்கள்” என சித்து தெரிவித்தார்.
Thnaks - UAE Tamil WEB
Thnaks - UAE Tamil WEB