குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பு. பெற்றோரின் தவறான கற்பித்தலும், அணுகுமுறையும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். அதுதான் அவர்களின் செயல்களாக மாறும். எனவேதான் குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில் மூன்று வயதைக் கடந்த குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றுவது சரியா என்பது பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கலாம். அதற்கான விளக்கம்தான் இந்தக் கட்டுரை.
நிச்சயம் குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றுவது தவறு. ஏனெனில் அது அவர்களை மன ரீதியாக பாதிக்கும். குழந்தைகள் முன்னிலையில் அம்மாவோ அப்பாவோ உடை மாற்றும்போது உறுப்புகளை கவனிக்கிறார்கள். பின் தனக்கு இருக்கும் உறுப்புடன் ஒப்பிடுகிறார்கள்.
அதுகுறித்து சந்தேகம் எழும்போது உங்களிடம் கேள்வி கேட்பார்கள். உடனே அப்படி கேட்கக் கூடாது என அதட்டுவதிலும், மழுப்புவதிலும் பிரயோஜனமில்லை. ஏனெனில் தவறு உங்களிடம் உள்ளது. எனவே அவர்கள் அவ்வாறு முதல் முறை கேட்கிறார்கள் எனில் வளர்கிறார்கள். புரிந்துகொள்ளும் பக்குவமும், கவனிக்கும் பக்குவமும் வளர்ந்துவிட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை இனி குழந்தை முன் உடை மாற்றக் கூடாது என சிந்தியுங்கள்.
நீங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு அதற்கான பதில் தெரியாமல் குழம்பிப் போவார்கள். அடுத்தமுறை குழந்தைக்கு மறைவாக உடை மாற்றினாலும் அவர்கள் எட்டிப்பார்க்கத் துவங்குவார்கள். மறைந்து பார்க்க முற்படுவார்கள். இது உங்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கலாம்.
பொதுவெளியில் அப்படி ஏதேனும் பார்த்துவிட்டு சட்டென கேள்வி கேட்டுவிட்டால் சங்கடம் உங்களுக்குத்தான். குறிப்பாக எதிர்பாலினத்தவர்களின் உறுப்பு அவர்களுக்கு வித்தியாசத்தை உண்டாக்கும். ஏன் அவ்வாறு நமக்கு இல்லை என சந்தேகம் எழும். எனவே அதுவும் தவறானதே.
ஆக...குழந்தைப் பருவத்தில் நல்லவை தீயவை என இரண்டையும் கவனிக்கும் குழந்தைகளிடம் நீங்கள்தான் அதை பற்றி புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு எழும் கேள்விகளை குழப்பமின்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.
குழந்தைக்கும் பாலுறுப்புகள் தெரியும்படி விடாமல் உள்ளாடைகளை மாற்றிவிடுங்கள்.