சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி கறங்கா வட்டை எனும் விவசாயக் காணிப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை பெரும்பான்மை சமூகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
குறித்த காணியின் சொந்தக்காரர்கள் இடத்தில் காணி உரித்தை நிரூபிக்கக்கூடிய சட்ட ரீதியான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் இருந்தும் குறித்த காணியை ஆட்சி செய்வதிலிருந்து குறித்த காணிச் சொந்தக்காரர்கள் இதுவரை தடுக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த காணியை சட்டரீதியாக அனுபவிப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் குறித்த காணிச் சொந்தக்காரர்கள் அவர்களது காணியை அனுபவிக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.
அரசியல் அதிகாரம் என்பது நிச்சயமாக இப்படியான விடயங்களுக்கு போராடுவதற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
மக்கள் வாக்களித்தது அவர்களுடைய சுய தேவையை பூர்த்தி செய்வதற்காக அல்ல மாறாக பொதுப் பிரச்சினைகள் அவர்களுடைய வாழ்வியல் கலாசாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவைகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் அவர்களுடைய அதிகாரம் வாய்ந்த பிரதிநிதியாக அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் பிரதிநிதிகள் நிச்சயமாக இருக்க வேண்டும் என்னும் நினைப்பினாலாகும்.
குறித்த காணிச் சொந்தக்காரர்கள் அவர்களுடைய காணியை பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும் அரசு மற்றும் பாதுகாப்பு உயர் மட்டங்கள் அதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பயிரிடுவதை தடை செய்யாமல் பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள் என்பது அதைவிட பெரிய வேதனையான விஷயம்.
உரிமைக்காகப் போராடுகிறோம் என்று கோஷம் படிப்பவர்களும் இம்முறை பாதுகாக்கின்ற காவலர்கள் நாங்களே என குரல் எழுப்புகின்ற அவர்களும் இந்த காணி விவகாரத்தில் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை என்பதே இந்த நிமிடம் வரையிலான நிலைப்பாடாகும்.
றனுாஸ் முஹமத் இஸ்மாயில்
(முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்)
சம்மாந்துறை.