(காரைதீவு சகா)
அன்று அனர்த்தம் என்பது அபூர்வமாயிருந்தது. அப்படி அந்நியமாயிருந்த அனர்த்தம் இன்று சாதாரணநிகழ்வுகள்போல அந்நியோன்யமாகிவருகிறது. இதற்கு மனிதநடத்தைகள்தான் காரணம் எனலாம்.
இவ்வாறு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனர்த்த முகாமைத்துவச் செயலமர்வை ஆரம்பித்துவைத்துரையாற்றிய சம்மாந்துறை பிரதேசசெயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா கவலை தெரிவித்தார்.
முன்னதாக அனர்த்தம் தொடர்பில் இத்தாலியில் பயிற்சிபெற்ற வளவாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அனுபவப்பகிர்வை மேற்கொண்டதுடன் காணொளி சகிதம் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அங்கு பிரதேசசெயலாளர் ஹனிபா மேலும் பேசுகையில்:
இன்றைய காலத்திற்குப்பொருத்தமான செயலமர்வு இடம்பெறுவதையிட்டு இம்முன்னணியை முதலில் பாராட்டுகிறேன்.முன்னணியின் ஸ்தாபகர் முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமாஇஸ்மாயில் செயற்றிட்டஅதிகாரி லைலாஉடையார் இணைப்பாளர் சகா ஆகியோருக்கும் நன்றிகள்.
இன்று இலங்கையில் இராஜாங்க அமைச்சுக்களைப்பார்த்தால் விளங்கும். அணுஅணுவாகப் பிரித்து அமைச்சின் செயற்பாடுகளை விபரித்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பது ஜனாதிபதியின் திட்டம். என்றார்.
அடுத்து அனர்த்தம் இடம்பெற்றுவிட்டால் உடனடியாக வழங்கவேண்டிய முதலுதவிகள் தொடர்பில் செய்முறை விளக்கங்களினூடாக பயிற்சி வழங்கப்பட்டது. மயக்கம் தீக்காயம் பாம்புக்கடி விசர்நாய்க்கடி வீழ்ந்தவிபத்து மாரடைப்பு குருதிவெளியேறல் எலும்புமுறிவு போன்றவை இடம்பெற்றால் எவ்வாறு முதலுதவி வழங்குவது என்பதுபற்றி செய்முறைவிளக்கமளிக்கப்பட்டது.
சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் மாவட்ட இணைப்பாளர் நௌசாட் வபி மற்றும் ஆசிரியர் எம்.அஜினாஸ் ஆகியோர் முதலுதவிப்பயிற்சியை செய்முறையுடன் வழங்கினர். பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வத்துடன் செயலமர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.