Ads Area

விசிட் விசாவில் துபாய் வந்து வேலை கிடைக்காததால் பார்க்கில் தங்கியிருந்த இலங்கையர்கள்.

இலங்கையிலிருந்து வேலை தேடி விசிட் விசாவில் துபாய் வந்த 20 இலங்கையர்கள், வேலை கிடைக்காததால் அல் ஹுதைபா பூங்காவில் (Al Hudaiba Park) தங்கியிருந்திருக்கின்றனர். இலங்கை மக்கள் நல்வாழ்வு அமைப்பான சஹானா (Sahana) மற்றும் துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த 20 பேருக்கும் தங்குமிடத்தை அளித்திருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய இலங்கைத் துணைத் தூதரக தலைமை அதிகாரி நலிந்தா விஜிரெத்னா (Nalinda Wijerathna),” இவர்கள் அனைவரும் விசிட் விசாவில் அமீரகம் வந்தவர்கள். நல அமைப்புகளின் உதவியோடு துணைத் தூதரகம் கஷ்டப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கியிருக்கிறது” என்றார்.

பார்க்குகளில் தவித்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவரப்பட்டதை சமூக குழுக்கள் உறுதிப்படுத்துகின்றன. “எங்களிடம் இலங்கை திரும்புவதற்கான டிக்கெட் பெறவோ அங்கு சென்றதும் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவோ காசில்லை. இங்கு பூங்காவில் குளிப்பதற்குக் கூட வசதியில்லாமல் தவித்திருந்தோம். எங்களைக் கடந்து செல்பவர்கள் அளிக்கும் உணவை நம்பியே நாங்கள் இத்தனை காலம் ஜீவித்திருந்தோம்” என மீட்கப்பட்ட ஒரு இலங்கையர் தெரிவித்தார்.

பெண்கள் உட்பட மொத்தம் 110 கஷ்டத்தில் தவித்த இலங்கையர்களுக்கு சஹானா இருப்பிடத்தை அளித்திருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் விஷ்வா திலகரத்னே தெரிவித்தார்.

“நாங்கள் கடந்த வாரத்தில் 20 பேரை அந்த பூங்காவிலிருந்து அழைத்துவந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருக்கிறோம். தற்போது அதே பூங்காவில் மேலும் 10 பேர் தங்கியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை எங்களுக்குத் தகவல் கிடைத்தது.அவர்களையும் விரைவில் மீட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி விமானம் மூலமாக அவர்களை இலங்கைக்கு அனுப்ப இருக்கிறோம்” என விஷ்வா தெரிவித்தார்.

“ஒரே நேரத்தில் 100 பேர் தங்குமளவிற்கான இடத்தை தற்போது தேடிவருகிறோம். எங்களுக்கு பல நல்லுள்ளம் கொண்டோர் உதவுகின்றனர். இலங்கை திரும்புபவர்கள் கட்டண தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் பல இலங்கையர்களால் விமான மற்றும் கட்டண தனிமைப்படுத்தலுக்கான செலவை ஏற்க முடியவில்லை. அப்படியானவர்களுக்கு நாங்களே பணம் செலுத்தியும் வருகிறோம்” என விஷ்வா தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

சிலர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவே பூங்காக்களில் தங்கிவருகின்றனர் எனவும் விஷ்வா குறிப்பிட்டார்.

Thanks - UAE TAMIL WEB
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe