கட்டாரில் உள்ள வீட்டுப் பணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் கடுமையான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என்று செவ்வாயன்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 105 வீட்டுப் பணிப் பெண்களிடம் மேற்கொண்ட விசாரனைகளின் அடிப்படையில் அவர்கள் தங்களது வீட்டு முதலாளிகளினால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளது. முறையான ஊதியம் வழங்கப்படாமை, உணவு வழங்கப்படாமை, முறையான ஓய்வு வழங்கப்படாது நீண்ட மணிநேர வேலைகள் செய்ய கட்டாயப்படுத்துவது மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற சொல்லொன்னா துன்பங்களை அனுபவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில முதலாளிகள் தங்களின் தலை முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைப்பதாகவும், முகத்தில் காரி துப்புவதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் கத்தாரில் உள்ள பணிப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி ஒரு பணிப் பெண் குறிப்பிடுகையில், “எனது மேடம் என்னை அரக்கன் என்று ஏசுவார், எனது நாக்கை வெட்டுவதாக, என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுவார் என குறிப்பிட்டுள்ளார்.
பல முதலாளிகள் தங்கள் வீட்டுப் பணிப் பெண்களின் கடவுச் சீட்டுக்களை (பாஸ்போட்) பறித்து வைத்துக் கொள்வதாகவும் அதனால் அவர்கள் எத்தகைய கொடுமைகள், சித்திரவதைகள், பாலியல் சீண்டல்களைச் சந்திக்க நேரிட்டாலும் வெளியில் செல்ல முடியாத நிலையில் பல இன்னல்களை சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரனை மேற் கொள்ளப்பட்ட 105 பணிப் பெண்களில் 90 பேர் வரை ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்ப்பதாகவும், ஏனையோர் 18 மணி நேரத்திற்க மேலதிகமாக வேலை செய்யவதாகவும் இது அவர்களின் ஒப்பந்த வேலை நேரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 15 பணிப் பெண்கள் தாங்கள் தங்கள் முதலாளிகளினால் மற்றும் அவர்களது உறவினர்களினால் உடல் ரீதியான காயங்கள், சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளதாகவும், 5 பணிப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளிலிருந்து கத்தாரில் மாத்திரம் 173,000 வீட்டுப் பணிப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர் அவர்களில் பெரும்பாலானோர் தங்களது முதலாளிகளினால் மனிதர்களாக கூட கணக்கில் எடுக்கப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் தொழிலாளர்கள் சீர்திருத்த சட்டங்கள் இருந்த போதும் இன்னும் வீட்டுப் பணிப் பெண்கள் விடையத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழில் - சம்மாந்துறை அன்சார்
செய்தி மூலம் - https://saudigazette.com