தொகுப்பு - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்போருக்கு என இஸ்லாமிய சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மிக கடுமையாக உள்ள இந்த சட்டங்களில் ஆச்சரியமளிக்கும் வகையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படவும் மற்றும் சமூக நிலைப்பாட்டிற்காகவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய சில தளர்வுகள்.
தற்கொலை:
தற்கொலை முயற்சிகள் மற்றும் தன்னை தானே காயப்படுத்தி கொள்வது பொதுவாக சட்டத்தால் தண்டிக்கப்பட கூடிய விஷயமாகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் படி, தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்து கொள்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படாது அவர்கள் மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவ குற்றங்கள் :
கௌரவக் கொலைகள் விவகாரத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மென்மையான போக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்களை தாக்கும் உறவினர்களுக்கு இனி எளிதான தண்டனைகள் கிடையாது. மேற்கண்ட குற்றங்கள் இப்போது முற்றிலும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டவையாக்கப்பட்டுள்ளது.
மது அருந்துதல்:
புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது குற்றம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒருவர் மது அருந்த குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 21 வயதிற்கு குறைவானவர்கள் குடிப்பது தண்டனைக்குரிய குற்றம். முன்னதாக, மது வைத்திருந்த ஒரு நபர் மற்றொரு குற்றச் சம்பவத்தில் சிக்கியிருந்தால் அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், லைசென்ஸ் பெற்ற வணிகங்களில் மட்டுமே மது அருந்த முடியும்.
திருமணம் ஆகாமல் ஆண்-பெண் இருவரும் சேர்ந்திருத்தல்.
புதிய மாற்றங்களின்படி ஒருமித்த பாலியல் உறவு (திருமணமாகாத இருவர் உடன்படுவது), திருமணமாகாமல் சேர்ந்து ஒரே இடத்தில வாழ்வது சட்டத்தால் தண்டிக்கப்படாது. இதற்கு முன் திருமணமாகாத ஜோடி அல்லது தொடர்பில்லாத பிளாட்மேட்ஸ் உடன் தங்குமிடத்தை பகிர்ந்து கொள்வது சட்டவிரோதமானதாக இருந்தது. ஆனால் மைனர் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு,குற்றம் நிரூபனமானால் மரண தண்டனை வழங்கப்படும்.
1992-ம் ஆண்டின் 35-ம் தண்டனை நடைமுறைச் சட்டத்தில் ஒரு புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கோ, சந்தேக நபருக்கோ அல்லது சாட்சிகளுக்கோ அரபு மொழி தெரியாவிட்டால், ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்து இருப்பதனால், அந்நாடு சுற்றுலா பயணிகளுக்கு மேற்கத்திய அனுபவம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு முன்பிருந்த கடுமையான இஸ்லாமிய சட்டத்தின்படி, வெளிநாட்டினர் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது.
அமீரக பார்கள் மற்றும் கிளப்களில் மதுபானம் கிடைக்கும் என்றாலும் தனிநபர் ஒருவர் மதுபானம் வாங்கவோ, எடுத்து செல்லவோ அல்லது வீட்டில் வைத்திருப்பதற்கோ அரசு அங்கீகாரம் பெற்ற உரிமம் வைத்திருக்க வேண்டும்.
இந்த புதிய தளர்வுகளின்படி, உரிமம் வைத்திருக்க தடை விதிக்கப்பட்ட முஸ்லிம்களும் இனி சுதந்திரமுடன் அந்த சலுகைகளை அனுபவிக்கலாம்.
இந்த சட்ட தளர்வுகளால் அமீரகத்தில் வசிக்கும் 2.5 லட்சம் பிரிட்டன்வாசிகள் உள்பட 84 லட்சம் வெளிநாட்டவர்கள் இனி திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்ற விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியிருக்காது.
தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி அமீரக குடிமக்கள் அல்லாதோர் இப்போது தங்கள் சொந்த நாடுகளின் சட்டங்களை வாரிசு உரிமை போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் இனி பயன்படுத்தலாம். ஒரு வெளிநாட்டவர் இறக்கும் போது, அவரது / அவளது சொந்த நாட்டின் பர்சனல் ஸ்டேட்டஸ் சட்டப்படி அவரது உயில் மற்றும் தோட்டங்களை நிர்வகிக்க முடியும். இருப்பினும் ஒரு உயில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தால், அதுவே பின்பற்றப்பட்டு மதிக்கப்படும்.