சம்மாந்துறை அன்சார் (இலங்கை)
சவுதியில் பணிபுரியும் பலர் என்னிடம் கேட்கும் ஒரு பிரதான கேள்வி “எனது கபீல், அல்லது நிறுவனம் எனது பாஸ்போட்டினை என்னிடம் வழங்காமல் அவர்களே வைத்துள்ளார்கள், கேட்டாலும் தருவதில்லை இதற்கு என்ன செய்வது..?? இது தொடர்பான சட்டம் என்ன எனக் கேட்கின்றார்கள். இதற்கு விளக்கமளிக்கும் வகையிலேயே இதனை எழுதுகிறேன்.
சவுதியில் கபீல் எனப்படும் முதலாளி ஒருவரோ அல்லது நிறுவனமோ தங்களது தொழிலாளிகளின் பாஸ்போட்டினை அவர்களிடம் ஒப்படைக்காது தாங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக 2000 சவுதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும், அதே போல் தங்களது தொழிலாளர்களுக்கான வேலை ஒப்பந்தத்தின் (contract) பிரதி (copy) ஒன்றையும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபிய தொழிலாளர் அமைச்சு சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இச் சட்டம்தான் பாஸ்போட்டினை வைத்திருப்பது தொடர்பில் இன்று வரை நடைமுறையில் உள்ளது என நினைக்கின்றேன்.
மேலும் உங்களது கபீலோ அல்லது நிறுவனமோ நீங்கள் ஒப்பந்தப்படி எந்த வேலைக்கு வந்தீர்களோ அந்த வேலையினைத் தராமல் உங்களை வேறு வேலைகள் செய்யச் சொன்னாலும் கூட அவர்களுக்கு எதிராக உங்களால் முறைப்பாடு செய்ய முடியும், இதற்கு அவர்களுக்கு 15 ஆயிரம் ரியால்கள் வரை அபாராதம் விதிக்கப்படும்.
அதே போல் உங்களது சம்பளத்தினை முறையாகத் வழங்காது விட்டாலோ, அல்லது மேலதிக ஊதியம் வழங்காது அதிக நேரம் வேலை வாங்கினாலோ அதற்கெதிராகவும் நீங்கள் முறையிடும் பட்சத்தில் கபீல் அல்லது கொம்பனிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த இச் சட்டத்திற்குப் பிறகு தற்போது பெரும்பாலான கொம்பனிகள் தங்களது தொழிலாளிகளின் பாஸ்போட்களை வைத்திருப்பதில்லை மாறாக அவர்களிடமே கொடுத்து விடுகின்றனர். தொழிலாளிகள் விரும்பினால் தங்களது பாஸ்போட்களை எழுத்து மூலமாக ஒப்பம் பெற்று கொம்பனிகளிடம் பத்திரப்படுத்தி வைக்கச் சொல்ல முடியும்.
சவுதியில் உள்ள பல நிறுவனங்கள் இச் சட்டத்தினை பின்பற்றினாலும் பல கபீல்கள் தங்களது வீட்டில் வேலை செய்யும் வீட்டுச் சாரதிகள் மற்றும் பணிப்பெண்களது பாஸ்போட்களை அவர்களிடம் கொடுக்காது தாங்களே வைத்துள்ளனர் இது சட்டப்படி குற்றமாகும் அவர்களுக்கு எதிராக நீங்கள் முறையிடலாம்.
செய்தி மூலங்கள் - https://www.arabnews.com மற்றும் https://saudigazette.com.sa