எம்.ரி. அஸ்மிர் முஹம்மட் தம்பி.
நாட்டிலும்,கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிகளிலும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழு விஷேட கூட்டம் நேற்று (14) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி, சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர், சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா தவிசாளர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவரின் பிரதிநிதி, உலமா சபை தலைவர், சம்மாந்துறை வர்த்தக சம்மேளன உப தலைவர், இந்து ஆலய பரிபாலன சபை செயலாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத அனுஸ்டானத்துடன் ஆரம்பமான இக் கூட்டத்தில் கோவிட் - 19 வைரசினால் உயிரிழங்தவர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன பிரார்த்தனை செய்யப்;பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது தலைமையுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் எமது பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டபோது உடன் செயற்படும் வகையில் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய சகல நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, எமது பிரதேசத்தின் கொவிட் தொற்று சம்பந்தமான புள்ளிவிபரங்களையும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 10,000.00 பெறுமதியான நிவாரணப் பொதியினை வழங்கும் நடைமுறைகளையும் குறிப்பிட்டதோடு எமது பிரதேசத்தில் இவ் வைரசினை கட்டுப்படுத்துவதற்கு கிராம மட்டத்தில் இயங்கும் குழுக்களும், பொது அமைப்புக்களும் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து தனது உரையினை முடித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் நாட்டின் தற்போதைய நிலைமையை எடுத்துக் கூறியதுடன் எமது பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் வைரஸ் பரவலினை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியதுடன் எமது பிரதேசத்தின் எல்லைப் புறங்களில் சுகாதார சோதனை சாவடிகளை பலப்படுத்த வேண்டும் எனவும் இதற்கு பொலிசாரின் உதவி இன்றியமையாதது எனவும் தெரிவித்து தனது உரையினை முடித்துக்கொண்டார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உரையாற்றுகையில் இவ் வைரஸ் நாட்டில் தொற்றிய ஆரம்ப பகுதிகளில் அரசாங்கம் இதனை கட்டுப்படுத்துவதற்கான பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள இவ் வைரஸ் அலையினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அப்பால் எமது சமூகம் இதனை கட்டுப்படுத்துவதற்கான பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே சமூகத்தை விழிப்படைய வைப்பதற்கு எம்மாலான சகல உதவிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு தனது உரையினை முடித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருடனும் கலந்தாலோசித்து பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. கிராம சேவை உத்தியோகத்தர்களின் தலைமையிலான கிராம மட்ட குழுக்களின் செயற்பாட்டினை சமய நிறுவனங்களுடன் இணைந்து வலுப்படுத்தல். இதற்கு ஒத்துழைப்பு வழங்காத உத்தியோகத்தர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல்.
2. வெளிப் பிரதேசங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கட்டாயமாக அவர்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும். அவ்வாறு மருத்துவ அறிக்கையுடன் வருகை தராதவர்களை சுகாதார சோதனை சாவடியில் வைத்தே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..
3. பாதையோர வியாபாரத்தில் ஈடுபடும் எந்தவொரு வியாபாரியும் தரித்து நின்று ஒரே இடத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் நடமாடி வியாபாரம் (ஆழடிடைந) செய்யும் முறைமையினைக் கட்டாயப்படுத்தல்.
4. சம்மாந்துறை பிரதேசத்தின் நுழைவாயில்களான நெல்லுப்பிடிச் சந்தி, வங்களாவடி, வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 04 இடங்களிலும் இயங்குகின்ற சுகாதார சோதனை சாவடிகளில்; வியாபார அனுமதி அட்டையினை வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதோடு இதன் நடைமுறை செயற்பாட்டினை மேலும் வலுப்படுத்துவற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோத்தர்களையும் கடமையில் ஈடுபடுத்த கோரிக்கை விடுத்தல்.
5. பாதையோர அல்லது நடமாடும் வியாபாரம், வெளியூர் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது மற்றும் தேவையற்ற பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு வர்த்தக சங்கம் பொது அமைப்புக்களின் உதவியை பெற்று பிரதேச சபையுடன் இணைந்து செயற்படக் கூடிய பொறிமுறை ஒன்றை வகுத்து வழிநடாத்தல் குழுவிற்கு தெரிவித்தல்.
6. வெளியூர்களில் இருந்து தொழில் நிமிர்த்தம் வருபவர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியூர்களுக்கு சென்று வருபவர்களின் விபரங்களை திணைக்களத் தலைவர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல்.
7. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாடசாலை மாணவர் சமூகத்தினை பாதுகாக்கும் நோக்கில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்து வழிநடாத்த பாடசாலை மட்ட கண்காணிப்பு குழுக்கள் திறன்பட செயற்படுவதை வலயக் கல்வி பணிமனை வழிப்படுத்தல் வேண்டும்.
இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு பி.ப 10.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
சம்மாந்துறை.
படங்கள் - ஐ.எல்.எம் நாஸிம்.