சவூதியில் மேலும் ஒரு வாரம் நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து தடை..!! ஆனால் வெளிநாட்டினர் மட்டும் சவூதியை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் மாறுபாடு கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து சவூதி அரேபியா அரசானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வார கால தடை விதித்தது. மேலும் தனது நாட்டின் எல்லைகளையும் மூட உத்தரவிட்டது.
தற்பொழுது ஒரு வார காலம் முடிந்த நிலையில், சவூதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சவூதியில் இருக்கும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மேலும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய சவூதி குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உடனடியாக அமலுக்கு வரும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறப்பட்டுள்ளது.
மேலும், சவூதி அரேபியாவிற்கு வரும் விமானங்கள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்குமாறும் சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.