உலகையையே ஆட்டி படைக்கும் கொரோனாவை எதிர்கொள்ள முயற்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மறு பக்கம் அதனோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அது போன்று நாமும் ஜனாஸா எரிப்போடு வாழ பழகிக்கொண்டோமா என்ற வினாவையே கேட்க தோன்றுகிறது. ஜனாஸா எரிப்பை எதிர்கொள்ளும் முயற்சிகளை நிறுத்தி, சமூக வலைத்தள எதிர்ப்புக்களை கூட நிறுத்தி ஜனாஸா எரிப்போடு வாழ பழகிக்கொண்டமையே கவலையான விடயம்.
தற்போது எமது இளைஞர்கள் ஆரியின் பிக் பொஸ் வெற்றியிலும், விஜயின் மாஸ்டர் திரைப்பட விமர்சனத்திலும் தீவிரமாக உள்ளனர். இவைகளை பகிர்ந்து மகிழ்வுறும் நிலையில் எம்மவர்களின் மனோ நிலை உள்ளதென சிந்திக்கும் போது, எமது சமூகம் எந்த இடத்திலுள்ளது என்பதை மட்டிட முடிகிறது.
நாம் ஏன் எமது எதிர்ப்புக்களை கை விட்டு அமைதியாகிவிட்டோம். அப்படி என்ன எதிர்ப்பை காட்டி களைத்துவிட்டோம். நாளை மறுமையில் என்னிடமும், உங்களிடமும் இறைவன் இவ்விடயத்தை எதிர்த்து என்ன செய்தாய் என கேட்டால், என்ன பதிலுள்ளது? நாம் சொல்ல போகும் பதில் வெள்ளை கொடி கட்டினோம், சில முகநூல் பதிவுகளை இட்டோம் என்பதை தவிர வேறு எதுவுமாக இருந்துவிடாது. இது தான் எதிர்ப்பா...?
உயிர் பிரிந்த வலியின் காரணமாக மென்மையாக கையாளப்பட வேண்டிய ஜனாஸாக்கள் கொடும் நெருப்பால் எரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மண்ணில் கை கூட பட்டிருக்காத இரண்டு பச்சிளம் குழந்தைகள் எரிக்கப்பட்டுள்ளன. சூடு ஆறுவதற்கு முன்பு அடக்கி பழக்கப்பட்ட எம்மவர்களின் உடல்கள் நீண்ட நாட்களாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்ட உடல்கள் சரியோ, பிழையோ ஏதோ ஒரு முடிவை பெற்றுவிட்டது. குளிர்சாதன பெட்டியில் இருக்கும் உடல்களினது குடும்பங்களின் மனநிலை எவ்வாறிருக்கும். தூங்கத்தான் முடியுமா, உணவுண்ணத் தான் முடியுமா? எமது சமூகம் இவ்வாறான ஒரு நிலையில் இருக்கும் போது எம்மவர்கள் பொங்கி எழ வேண்டுமல்லமா? நாம் பொங்காமல் நிலத்தில் வழிந்து சாந்தமாகி விட்டோம்.
நாம் முடியாதென்று ஒதுங்க என்ன செய்துவிட்டோம். நாம் பாராளுமன்றம் அனுப்பிய பா.உறுப்பினர்கள் 20 நாள் குழந்தை எரிக்கப்பட்ட தினம் மதுவையும், இசையையும் கொண்ட ஆளும் கட்சியின் பாட்டியில் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அங்கு சென்றதே ஜனாஸா எரிப்பை நிறுத்துவதை பற்றி பேசுவதற்கு என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 52 நாள் பிரச்சினையின் போது எமது அரசியல் வாதிகள் செயற்பட்டளவு வீரியத்தோடு செயற்படுகிறார்களா என்றால் "இல்லை" என்பதுவே பதில். இவர்களின் முகத்தில் காறி உமிழ வக்கற்றவர்களாக நாம் உள்ளமையே எமது உணர்வு செத்துவிட்டதன் வெளிப்பாடு.
எம் வீடுகளுக்குள் இந்த எரிப்பு நுழைகின்ற போது தான், எரிக்கப்பட்ட உடல்களின் குடும்பம் அனுபவிக்கின்ற வலியை உணர்வோமா? நாளை எமது வீடுகளுக்குள் இந்த நெருப்பு நுழையாதென்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. அந்த நெருப்புக்கு நாமே இரையாக மாட்டோம் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமுமில்லை. எமது எதிர்ப்புக்களை கை விட்டு, வீட்டினுள் உறங்க நேரமில்லை. நாம் தொடர்தேச்சியான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்களை வெளிக்காட்ட தயாராக வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.