(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் இயங்கி வரும் "ஹியுமன் லின்க்" விஷேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல்கான் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை கொண்டு இயங்குகிற இந்நிறுவனம் கிழக்கு மாகாண சமூக சேவைப் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சுமார் 15வருட காலமாக இப்பிரதேசத்தில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் நிருவாகத்தின் கீழ் விஷேட கல்விப் பிரிவு, சுகாதார சேவைப் பிரிவு, தொழில் வழிகாட்டல் பிரிவு, முயற்சியாண் மைப் பிரிவு மற்றும் மாணவர் தங்குமிட கவனிப்புப் பிரிவு என 05 பிரிவுகளில் காணப்படுகின்றன.
63 மாற்றுத்திறனாளி மாணவர்களை கொண்டு இயங்கும் இந்நிறுவனமானது சரியான வளங்கள் இல்லாமல் இயங்குவது ஒரு சவாலான விடயமாக இருப்பதுடன் நல்ல வளங்களை தேடிக் கொள்வது எமது உறுப்பினர்கள் அனைவரினதும் கடற்பாடாகும் என இந்நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல்கான் வேண்டிக் கொண்டார்.
இதன் போது கடந்த கால செயற்பாடுகள், கணக்கு விபரங்கள், எதிர்காலத் திட்டங்கள் என பல விடயங்கள் ஆராயப்பட்டன. இதன் போது புதிய நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தில் பணிப்பாளர் ஏ.கமறுடீன், செயலாளர் எம்.என்.எம்.றபாஸ், பொருளாளர் ஏ.எல்.பாறுக், உறுப்பினர்கள், நிறுவன ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.