Ads Area

சவுதி ரியாத் நகரில் 9 மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களின் அவலம்.

சவுதி அரேபிய ரியாத் நகரில் உள்ள நாடு கடத்தல் மையத்தில் Riyadh Tarheel (deportation center) சுமார் 40க்கும் மேற்பட்ட இலங்கைப் பணிப் பெண்கள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றார்கள்.


அவர்களுக்கு சரியான உணவோ, துாங்குவதற்கான சரியான வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை, தினம் தினம் சொல்லொன்னா இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் விடையத்தில் ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் எந்தவித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.


சவுதி அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள இந்த நாடுகடத்தல் மையத்தில் உள்ள பணிப்பெண்களை இலங்கைத் துாதரகம் பொறுப்பெடுத்து அவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்காத வரை சவுதி அரசு அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்காது.


அங்கிருக்கும் பணிப்பெண் ஒருவரது தொலைபேசி இலக்கத்தை நாட்டில் இருக்கும் அவரது உறவினர் ஒருவர் மூலமாக பெற்று நான் அவரிடம் சகல விடையங்களையும் கேட்டறிந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE)  கொழும்பு காரியாலயத்திற்கு அறிவித்தேன்......வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கு நாடுகடத்தில் மையத்தில் பணிப்பெண்கள் இப்படி சிரமப்படுவது அறவே தெரிந்திருக்கவில்லை, ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் குறித்த பணிப்பெண்கள் விடையத்தில் எங்களுக்கு எதுவித தகவல்களையும் வழங்கவிலை, எங்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்து என் மூலம் அறிந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து உடனடியாக ரியாத் துாதரகத்திற்கு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

சவுதியில் உள்ள பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் Mr. M.M. Deshapriya Counsellor (E&W) 00966-558312220 00966-114195267 என்பவரை நியமித்துள்ளது. (கீழே லிங்கை கிளிக் செய்து பார்த்தால் அந்தந்த நாடுகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகளைக் காணலாம் (http://www.slbfe.lk/file.php?FID=356)


ஆனால் Mr. M.M. Deshapriya Counsellor என்பவரோ பணிப் பெண்கள் விடையதில் இலங்கைத் துாதரகம் சார்பில் எதுவித நடவடிக்கைளும் எடுக்கவில்லை, இதுவரை பாராமுகமாகவே இருந்துள்ளார் / ளார்கள்.


வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் என்னால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய Mr. M.M. Deshapriya Counsellor உடனடியாக நாடுகடத்தல் மையத்தில் உள்ள பணிப்பெண்ளை தொடர்பு கொண்டு அவர்களை எதிர் வரும் மாதங்களில் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்க எடுப்பதாக தெரிவித்திருந்தார் இருந்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.


வேலையில்லாமல், உண்ண சரியான உணவு இல்லாமல், நிம்மதியான துாக்கம் இல்லாமல், சவுதி அரேபிய நாடுகடத்தில் மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள பணிப்பெண்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அங்கு உள்ள பலருக்கு இரத்த அழுத்த நோய், தலையில் கட்டி, முதுகில் கட்டி, மாரடைப்பு போன்ற நோய்களும் உள்ளது. பலர் நாடு செல்ல முடியாமையினால் மன அழுத்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலையில் கூட இருந்து வருகின்றனர். சில பணிப்பெண்கள் கையில் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் சவுதி அரேபிய இலங்கைத் துாதரக அதிகாரிகள் சவுதியில் உள்ள இலங்கைப் பணிப்பெண்களையும், பணியாளர்களையும் நாயை விடவும் கேவலமாகவே நடாத்துகிறார்கள்....நாடுகடத்தல் மையத்தில் உள்ள வேறு நாட்டுப் பெண்களை அந்தந்த நாட்டு துாதரகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது இலங்கைப் பணிப்பெண்கள் மாத்திரமே இன்னும் சிறைப்பட்டுக் கிடக்கின்றார்கள். இதனால் பலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் எண்ணத்திலும் உள்ளனர்.


இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்கு மிக உயர்வானதாக இருந்தாலும் அவர்கள் விடையத்தில் தற்போதை அரசும், அரச அலுவலகங்களும், துாதரககும் பாராமுகமாகவே இருந்து வருகின்றது. சவுதியில் பணிபுரியும் இலங்கையர் எவரேனும் துாதரகத்தினை தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர், தொடர்பு கொள்ள அழைப்பெடுத்தால் கூட அதற்கு பதில் அளிப்பது கூட இல்லை.

இலங்கைத் துாதரகம் பல மாதங்களாக சவுதி அரேபியாவின் தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள பணிப்பெண்களை உடனடியாக தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு, வெளிநாட்டு அமைச்சு, மனித உரிமைகள் ஆணைக்குழு அனைவரும் இவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும்.


சம்மாந்துறை அன்சார்

சவுதி அரேபியாவிலிருந்து.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe