சவுதி அரேபியாவில் தனது வீட்டில் சாரதியாகப் பணிபுரிந்து வந்த பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அவரது காதலியான பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணோடு சேர்த்து வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார் சவுதியைச் சேர்ந்த ஒருவர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சவுதியில் வீடு ஒன்றில் சாரதியாகப் பணிபுரிந்து வந்த ஆசாத் முஹம்மத் என்ற பாகிஸ்த்தான் நாட்டவர் ஒருவர் தான் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணைக் காதலிப்பதாகவும், அவர் இஸ்லாத்தினை ஏற்றவர் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவரது கபீலான (Sponsor) மஷ்யாட் அல் ஹெசால் (Mazyad Al-Heshal) என்பவர் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருவரையும் சேர்த்து வைத்து அவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
உடனடியாக அவர் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணின் கபீலை (Sponsor) தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறி அவரிடமும் சம்மதத்தினைப் பெற்று பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு துாதரகங்களைத் தொடர்பு கொண்டு திருமணத்திற்குத் தேவையான ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார்.
மணமகனை ஒரு சவுதியைப் போன்று தலைப்பாகை, தோப் என அலங்காரம் செய்து, அவரின் சொந்தபந்தங்களையும் அழைத்து திருமணத்தை பெரிய அளவில் செய்துள்ளார்.