இந்தியா.
உத்தர பிரதேச சியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் சையது வாசிம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “குரானை நம்பாதவர்கள் மீது வன்முறையை ஏவக்கூடிய வகையில் குரானில் இடம்பெற்றுள்ள 26 வசனங்களை நீக்க வேண்டும்”என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், குரானை நம்பாதவர்கள், குடிமக்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரை பார்த்து சீரியஸாகவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்களா என நீதிபதி நாரிமன் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குரானை நம்பாதவர்கள் மீது வன்முறை ஏவக்கூடிய வகையில் உள்ளதாகக் கூறி வசனங்களை படித்துக் காண்பித்தார். அத்துடன், மதரசா கல்வியை ஒழுங்குப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மனு அடிப்படையிலேயே மிகவும் அற்பமானது என காட்டமாகக் கருத்து தெரிவித்த நீதிபதி நாரிமன் , மனுவைத் தள்ளுபடி செய்தார். அத்துடன், மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.