குவைத்தில் மரணமடையும் முஸ்லிம் அல்லாதவர்களின் உடல்களை அவர்களது சமய நம்பிக்கையின்படி தகனம் (எரிக்க) செய்ய மின் மயானம் (Electric Crematorium) பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாம் அல்லாத ஏனைய சமயங்களைப் பின்பற்றுவோர் விடுத்த கோரிக்கையினை குவைத் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் குவைத் நகராட்சியின் இயக்குனர் டாக்டர் பைசல் அல்-அவாடி (Faisal Al-Awadi) கூறுகையில்,
குவைத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கையின்படி இறுதி சடங்குகள் செய்து உடலை புதைக்க குவைத் நாடு அனுமதிக்கிறது மேலும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் இறந்தால் கூட அவர்களது சடங்குகளை செய்து அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் ஆனால் உயிழக்கும் நபர்களின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு உடல்களை தகனம் (எரிக்க) செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை குவைத் அரசு நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் மரணமடையும் மாற்று மதத்தவர்களை அவர்களின் மதம், பாலினம் அல்லது தேசியம் (நாடு) ஆகியவை என்ன என்பதை பார்க்காமல் அனைத்து வித மரியாதையுடன் அவர்களது உடல்களை அடக்கம் செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம் ஆனால் இறந்தவர்களது உடலை தகனம் செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை அவ்வாறு தகனம் செய்ய விரும்பும் நபர்கள் தங்கள் நாடுகளுக்கு உடலை எடுத்துச் சென்று அங்கேயே தகனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குவைத் அரசாங்கம் இறந்த உடல்களை தகனம் செய்வதை 1980-களின் முற்பகுதியிலிருந்து செய்ய தடை செய்திருந்தது அந்தத் தடை இன்று வரை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.