சம்மாந்துறை அன்சார்.
சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகம் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிப் பாவனை விடையத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதன் படி பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிகளை அதானுக்கும் (தொழுகைக்கான அழைப்பு) மற்றும் இகாமத்துக்கும் (தொழுகைக்கான 2ம் அழைப்பு) மாத்திரமே பயண்படுத்த வேண்டும், அதிலும் குறைந்தளவான சத்தத்தில் வைத்தே பயண்படுத்த வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
இக் கட்டுப்பாடானது சவுதியில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் பொருந்தும் எனவும், இது இஸ்லாமிய ஷரீயாவுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமாகும் எனவும், இதனை மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
பள்ளிவாசல்களில் எழுப்படும் அதிக ஒலியானது வீட்டில் உள்ள நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக வந்த முறைப்பாட்டுக்கு அமைய இந் நடவடிக்கையினை சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
ஷரியாவின் படி தொழுகையின் போது தொழுகை நடாத்தும் இமாமின் குரல் பள்ளிவாசலுக்குல் உள்ள அனைவராலும் கேட்கப்பட வேண்டும், வெளியில் உள்ள பக்கத்து வீடுகளில் குரல் கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும் மேலும் பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அல்-குர்ஆனை சத்தமாக ஓதும்போது, அதன் வசனங்களை யாரும் கேட்காதும், சிந்திக்காதுமிருப்பது அல்-குர்ஆனை அவமதிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.
பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் வணக்கவழிபாடுகள் இறைவனுக்காக செய்யப்படுபவைகளாகும் அதனை பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் செய்யக் கூடாது.
ஆகையால் வெளிப்புற ஒலிபெருக்கிகளை அநாவசியமாகப் பயண்படுத்தி வீட்டில் உள்ள சிறார்கள், நோயாளிகள், முதியோருக்கு அசௌகரிங்களை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.