(காரைதீவு சகா)
சம்மாந்துறையில் 70 வங்கி ஊழியர்களில் இருவருக்கு கொரோனா! மேலும் 3 வங்கிகளில் 33 பேருக்கு பிசிஆர் சோதனை!
சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள ஏழு (7) அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் 70 பேருக்கு கடந்த (16) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் பெறுபேறு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி பிசிஆர் சோதனை செய்யப்பட்ட 70 ஊழியர்களில் அமானா வங்கியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்தாக சுகாதாரதுறை தெரிவித்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளது.
சம்மாந்துறை நகரிலுள்ள மக்கள் வங்கி, ஹற்றன் நாசனல் வங்கி, அமானாவங்கி ,தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி ,சணச அபிவிருத்தி வங்கி, செலான்வங்கி ஆகிய ஏழு வங்கிக் கிளைகளில் கடந்த வெள்ளிக்கிழமை பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை தெரிந்ததே.
சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் , சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
மேற் பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.எ.றாசிக், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் முருகேசு ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் இச்சோதனை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை நேற்றும் 3 வங்கிகளில் கடமையாற்றும் 33 ஊழியர்களுக்கு ,எழுமாறான பிசிஆர் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை இலங்கை வங்கி ,எல்பி பினாஸ்ஸ் மற்றும் ஆசியா அசெற் ஆகிய நிதி நிறுவனங்களின் ஊழியர்களே இவ்விதம் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதற்கான முடிவுகள் நாளை கிடைக்கப் பெறலாமெனத் தெரிகிறது.