Ads Area

இராணுவத் தலைமையகத்துக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அக்குரேகொட இராணுவத் தலைமையகத்துக்கு, இன்று (03) முற்பகல் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

இராணுவத் தலைமையக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார். அங்கு, ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. 

இதன்போது, எயார் மொபைல் படைப்பிரிவின் (Air mobile brigade) மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.  அது குறித்த தகவல்கள் அடங்கிய நூல் மற்றும் ஜனாதிபதி அவர்களின் விஜயத்தை நினைவுகூரும் நினைவுச் சின்னம் என்பவற்றை, ஜனாதிபதி அவர்களுக்கு இராணுவத் தளபதி வழங்கினார். 

விமானப் படையணியின் மின் நூலை, இணையத்தில் பதிவேற்றிய ஜனாதிபதி அவர்கள், இராணுவத் தலைமையகத்தின் செயற்பாட்டுப் பிரிவையும் திறந்து வைத்தார். அத்துடன், இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள நூதனசாலை உள்ளிட்ட பல இடங்களையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். 

சிரேஷ்ட பணிக்குழாம் பிரதானிகளுடன் குழுப் புகைப்படத்துக்குத் தோற்றியதன் பின்னர், ஜனாதிபதி அவர்கள் விசேட அதிதிகளுக்கான கையேட்டில் நினைவுக் குறிப்பொன்றையும் பதிவு செய்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

ஊடகப் பிரிவு.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe