(அஸாறுடீன் சலீம்)
இலங்கையில் 160 தேர்தல் தொகுதிகள் உள்ளன. இதில் எல்லா தொகுதிகளும் ஏதோ ஒரு அடிப்படையில் - எந்தவொரு கட்சியினூடாகவேனும் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுள்ளது.
ஆனால் சம்மாந்துறை தொகுதி மாத்திரம் இதற்கு விதிவிலக்காகும். எந்தவொரு அடிப்படையிலும் - எந்தவொரு கட்சியினூடாகவும் சம்மாந்துறை தொகுதிக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
இது விகிதாசார தேர்தல் முறைமையின் குறைபாடு மாத்திரமன்றி, எமது மக்களின் குறைபாடும், யார்கூலிக்கு மாரடிக்கும் இடைத் தரகர்களினது துரோகத் தனமும் என்றால் அது ஒருபோதும் பொய்யாகாது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களிலும் பார்க்க சம்மாந்துறையில் மாத்திரமே இடைத் தரகர்களின் சுய லாபச் செயற்பாடு மிக அதிகம் எனும் செய்தி வெட்கமான ஒரு விடயமாகும்.
இப்படியான இடைத்தரகர்கள் ஊர் - தொகுதி நலன் என்ற பொது நல சிந்தனைகளுக்கு அப்பால் சென்று, அற்ப சொற்ப சுய நலத்திற்காக செயற்பட்டு ஜனநாயக ரீதியாக ஒரு தொகுதிக்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை விகிதாசார தேர்தல் முறைமையின் பிரதிகூலத்தினை பயன்படுத்தி குழி தோண்டிப் புதைக்கின்றனர்.
தொகுதி ரீதியான தேர்தல் முறை சீர்திருத்தம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுமாயின், முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இலங்கையில் 100% உறுதிப்படுத்தும் ஒரேயொரு தொகுதியாக சம்மாந்துறையே அமையும் என்பதற்கு கடந்த 1990 களுக்கு முன்னதான சுமார் அரை நூற்றாண்டு சாட்சியமாக அமையும்.